GST: டிவி, மொபைல், வாஷிங் மெஷின்... ஜிஎஸ்டியால் இத்தனை பொருட்கள் விலை குறைவா? பட்டியலிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டு காலம் நிறைவடையும் நிலையில், 15-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை, ஜிஎஸ்டியால் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டு உள்ளார்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டு காலம் நிறைவடையும் நிலையில், 15-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை, ஜிஎஸ்டியால் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டு உள்ளார்.
2017ஆம் ஆண்டு அமல்
நாடு முழுவதும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு வகையில் வரி விதிக்கப்படுகிறது. இது தவிர்த்து தங்கத்துக்கு 3 % வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில வகை உணவுப் பொருட்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி, மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி என 2 வகைகளில் வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடங்கி இன்றுடன் 6 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறைந்த பொருட்களின் பட்டியலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
வரி செலுத்தும் சுமை குறைந்தது
’’மத்திய மற்றும் மாநில அரசுகளின் 17 வகையான வரிகள் மற்றும் 13 வகையான செஸ் வரிகளை ஒன்றிணைத்து 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குடிமக்களுக்கு வரி செலுத்தும் சுமை குறைந்தது மட்டுமல்லாமல், நாட்டில் பொருட்கள் வாங்கும் திறனும் உயர்ந்தது.
அதன்படி விலை குறைந்த பொருட்கள் இதோ..!
பொருட்கள் - முந்தைய வரி தற்போதைய ஜிஎஸ்டி வரி
1.குளியல் அறை, சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சிங்க்குகள், வாஷ் பேசின்கள், கழிப்பறை பொருட்கள், இருக்கைகள் மற்றும் கவர்கள் (Baths, Sinks, Wash Basins, Bidets, Lavatory Pans, Seats and Covers, Flushing Cisterns and similar sanitary ware of plastics and other articles of plastic) - 28% 18%
2. தலைமுடி எண்ணெய், பற்பசை, சோப்பு - 27% 18%
3. டிடெர்ஜெண்ட்டுகள் மற்றும் சலவை பவுடர்கள் - 28% 18%
4. அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள்- 28% 18%
5. டேபிள்வேர், கிச்சன்வேர், மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் - 18%-28% 12%
6. பென்சில், ஷார்ப்பனர்கள்- 18% 12%
பொருட்கள் - முந்தைய வரி, தற்போதைய ஜிஎஸ்டி வரி
1. 27 இன்ச் வரையிலான டிவி - 31.3%, 18%
2. குளிர்சாதனப் பெட்டி- 31.3%, 18%
3. வாஷிங் மெஷின் - 31.3%, 18%
4. எலக்ட்ரிக்கல் பொருட்கள், மிக்சர், ஜூசர், வேக்கம் கிளீனர் இன்ன பிற- 31.3%, 18%
5. கீசர், ஃபேன், கூலர் - 31.3%, 18%
6. மொபைல் போன்கள் - 31.3%, 12%
7. மரச்சாமான்கள் - 25%- 31%, 18%’’
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.