11 AM Headlines: தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை, இந்தியர்கள் பாணியில் ட்ரம்ப் வாக்கு சேகரிப்பு - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். புதுமணை தம்பதிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அரையிறுதி தான் - துணை முதலமைச்சர் உதயநிதி
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் அரையிறுதி தான். 2026 சட்டமன்ற தேர்தல் தான் உண்மையான இறுதிப்போட்டி. முதலமைச்சர் ஸ்டாலின் நிர்ணயித்த 200+ தொகுதிகளையும் தாண்டி, திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது இளைஞரணியில் உள்ள நம் அனைவரின் கடமை - சேலத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
உச்சாணிக் கொம்பில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,300 ஆக உள்ளது. வெள்ளி விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
”அயோத்தி வழக்கு” - கடவுளிடம் தீர்வு கேட்டேன்
"நீதிமன்றத்தில் பல வழக்குகளில் என்ன முடிவு எடுப்பது? என புரியாத நிலை வந்துள்ளது. அத்தகைய வழக்குதான் அயோத்தி ராம் ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கு. அப்போது கடவுள் முன் அமர்ந்து, இதற்கு தீர்வு கிடைக்க வழிகாட்டுமாறு வேண்டினேன். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், அவர் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டுவார்” - D.Y.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தொடர்ந்து அதிகரிக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அச்சம். அனைத்துமே புரளி எனத் தெரியவந்ததால் சற்று நிம்மதி. இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிரகரித்து வரும் நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகையை அதிகரிக்க புதிய யுக்தி -சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியும் என சட்டம் கொண்டுவரவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தென்மாநிலங்களில் குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்க, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் உயிரிழப்பு
ஜம்மு & காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமில் தீவிரவாதிகள் நடத்டிய துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் ஜெய்ஷா, ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உணவு சமைத்து டிரம்ப் வாக்கு சேகரிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயாரித்து முன்னாள் அதிபர் டிரம்ப் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது கல்லூரி காலத்தில் McDonald's கடையில் வேலை செய்ததாக கமலா ஹாரிஸ் பேசி வரும் நிலையில், அவரை விட 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை பார்த்துள்ளேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக, கடந்த 2021ம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய போட்டியில், இந்திய அணிக்காக அவர் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையை வென்ற நியூசிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. அந்த அணி டி20 கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதோடு, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டி வரை முன்னேறி தென்னாப்ரிக்கா அணி தோல்வியை சந்தித்துள்ளது.