ஐஐடியில் என்னதான் நடக்குது..? தொடரும் மர்மம்.. அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட மாணவர்!
உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு:
இதற்கிடையே, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐஐடி மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, வழக்கின் விசாரணை காவல்துறையிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி ஐஐடியில் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 20 வயது மாணவர், நேற்று தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஐஐடியில் தொடரும் மர்மம்:
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் ஆயுஷ் ஆஷ்னா. இவர், நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ், இந்த ஆண்டு பி.டெக் இறுதித் தேர்வை எழுதியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவரது அறையில் இருந்து இதுவரை எந்த குறிப்பும் மீட்கப்படவில்லை. ஆயுஷின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நேற்று 17 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று ஐஐடியில் நிகழ்ந்த தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த மாணவர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கோட்டாவுக்கு இடம் பெயர்ந்துள்ளார். கடினமாக கருதப்படும் ஐஐடி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்காக அவர் பயிற்சி வகுப்புகளில் பயின்று வந்துள்ளார்.
இவர் தனது நண்பருடன் கோட்டாவில் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். தனது நண்பர் வெளியூர் சென்றிருந்த போது மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை களைவதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு பல்கலைக்கழக மானிய குழுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேட்டு கொண்டது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று, தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா, பயல் தட்வி ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.