யார் ஆட்சிக்கு வந்தாலும் டிரான்ஸ்பர்தான்.. நேர்மையின் மறுபெயர் அசோக்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி?
கல்வியின் மீதான ஆர்வத்தால் கலை படிப்பு தொடங்கி பொறியியல் படிப்பு வரை, சட்டம் தொடங்கி பொருளாதாரம் வரை பல துறைகளில் பட்டம் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா, பணியாற்றிய காலத்தில் மொத்தம் 57 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.

கடும் அரசியல் அழுத்தத்திற்கு மத்தியில் 33 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு நேற்று ஓய்வு பெற்றுள்ளார் ஹரியானா கேடரை சேர்ந்த அசோக் கெம்கா. ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் இவர் மொத்தம் 57 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவரை பணியிட மாற்றம் செய்யாமல் இருந்தது இல்லை. இதனால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர் அசோக் கெம்கா.
நேர்மையின் மறுபெயர் அசோக்:
கல்வியின் மீதான ஆர்வத்தால் கலை படிப்பு தொடங்கி பொறியியல் படிப்பு வரை, சட்டம் தொடங்கி பொருளாதாரம் வரை பல துறைகளில் பட்டம் பெற்றவர் அசோக் கெம்கா. முதலில் புகழ்பெற்ற டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், பின்னர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை படித்த ஐஐடி கரக்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்சில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐஏஎஸ் அதிகாரியாக ஆன பிறகும் கூட இவருக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறையவில்லை. ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே போல், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் தொடர் அதிரடியில் ஈடுபட்டார். இதற்கு, பணியிட மாற்றம் என்ற விலையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஹரியானாவில் காங்கிரஸ், பாஜக, இந்திய தேசிய லோக் தளம் என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவரது சமரசமற்ற அணுகுமுறை அதிகார வர்க்கத்தை அலறவிட்டது. சராசரியாக 7 மாதங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
33 ஆண்டுகளில் 57 முறை டிரான்ஸ்பர்:
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, பூபேந்திர சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் போது, அசோக் கெம்கா, 21 முறைக்கு மேல் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், 2014 ஆம் ஆண்டு முதல் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசாங்கத்தில், முதல் ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏழு முறை இடமாற்றம் செய்யப்பட்டார்.
நேர்மையாக இருந்த ஒரே காரணத்தால் அவர் பல முறை அதிகாரம் இல்லாத துறைகளுக்கு மாற்றப்பட்டார். ஆவணக் காப்பகம், தொல்லியல் துறை, அச்சு மற்றும் எழுதுபொருள் துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
முடிவுக்கு வந்த சகாப்தம்:
கடந்த 2012ஆம் ஆண்டு, நிலப் பதிவு மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது, ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் மற்றும் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு இடையிலான சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார் அசோக் கெம்கா. இதையடுத்து, பூபேந்திர சிங் ஹூடா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அவர் போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார். தகுதி இல்லாத லாரிகளுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்க மறுத்த காரணத்தால், 2015ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலைநிறுத்தம் செய்தனர். இதனால், அவர் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார்.





















