Vijayakanth Politics: திரைத்துறையை போன்று அரசியலிலும் மிரட்டிய விஜயகாந்த்.. திராவிட கட்சிகளுக்கு சவாலாக மாறியது எப்படி?
இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு சவாலாக மாறிய விஜயகாந்த், அரசியல் வாழ்வில் சாதித்தது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரசிகர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரைத்துறையை தொடர்ந்து அரசியலிலும் தனித்த அடையாளத்தின் மூலம் உச்சம் தொட்டவர். ஏழை மக்களின் நாயகனாக வலம் வந்த எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்பியவர். அரசியலிலும் அதே பாணியை கையாண்டவர். திரைத்துறையில் ரஜினி உச்சம் தொட்ட காலத்தில் அவருக்கு இணையான செல்வாக்கு படைத்த உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர். நகரங்களை தாண்டி கிராமங்களின் பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்தவர்.
ரஜினிக்கு இணையான உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த்:
இந்த செல்வாக்கை பயன்படுத்தி அரசியலிலும் கால் பதிக்க விரும்பிய விஜயகாந்த், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி மக்களுக்கு பல்வேறு உதவி செய்தார். சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் அளிப்பது என தனது இமேஜை உயர்த்தி கொண்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று தனது நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து, அரசியல் கட்சிக்கான விதையை விதைத்தார்.
தனது அரசியல் நகர்வின் உச்சமாக, கடந்த 2005ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி, புது கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். தேசியத்தையும் திராவித்தையும் இணைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டினார். ஊழல் ஒழிப்பு, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷத்தை முன்வைத்தார். சினிமா வாழ்க்கையை போல அரசியல் வாழ்க்கையிலும் உச்சம் தொட ஆரம்பித்தார். சினிமாவில் ரஜினி, கமலுக்கு சவாலாக விளங்கிய விஜயகாந்துக்கு அரசியலிலும் இரு பெரும் கட்சிகளின் சவால்கள் காத்திருந்தது.
தமிழ்நாடு என்றாலே திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள்தான் என்ற நிலையை மாற்ற 2006 சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டார். எந்த வித கூட்டணியிம் இன்றி, 232 தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிட்டது. கட்சி தலைவர் விஜயகாந்த், அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை தவிர்த்து வேறு யாரும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவர்கள். இருப்பினும், தேர்தலில் 8.38 சதவிகித வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்தார். திமுக, அதிமுகவை தவிர்த்து பாமகவுக்கு பெரிய அதிர்ச்சி. மூன்றாவது பெரிய கட்சி என பாமக சொல்லி கொண்டு வந்த நிலையில், முதல் தேர்தலிலேயே அந்த இடத்தை பிடித்தார் விஜயகாந்த்.
இரண்டாவது தேர்தலில் இரண்டாவது இடம்:
திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டிய சூழலுக்கு திமுகவை தள்ளியது. அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமே விஜயகாந்த்தான் என சொல்லும் அளவுக்கு சவாலாக மாறியது தேமுதிக. சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விஜயகாந்த் உருவெடுத்தார். விருத்தாசலம் தொகுதியில் பாமகவை தோற்கடித்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு சென்றார்.
இந்த சமயத்தில்தான், கோயம்பேட்டில் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்றார் விஜயகாந்த். தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக இப்படி செய்வதாகக் கடுமையாக விமர்சித்தார்.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். மீண்டும் தனித்து களமிறங்கிய விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு பெருகியது. 10.45 சதவீத வாக்குகளை பெற்று, அரசியலில் அடுத்த கட்டத்துக்கு சென்றார். இது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. விஜயகாந்தை நோக்கி இரு பெரும் திராவிட கட்சிகள் வர தொடங்கின. தங்களது கூட்டணியில் விஜயகாந்தை இணைக்க வேண்டும் என கருணாநிதி, ஜெயலலிதா என இருவரும் விரும்பினர். இறுதியில், சோ மேற்கொண்ட முயற்சியால், அதிமுக கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். திராவிட கட்சிகளுக்கு மாற்று, ஊழல் ஒழிப்பு என கட்சியை தொடங்கிய விஜயகாந்த், ஊழல் குற்றச்சாட்டை சந்தித்த ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிகவின் அரசியல் பாதையை மாற்றி அமைத்தது.
அரசியல் வாழ்விலும் உச்சம் தொட்டது எப்படி?
ஆனால், அந்த தேர்தலில் தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு, சட்டப்பேரவையில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றிபெற்றது. திமுகவுக்கு 23 இடங்கள்தான் கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார். அதன் பிறகு, ஜெயலலிதாவுக்கே சவாலாக மாறினார். சட்டப்பேரவைில், ஜெயலலிதா முன்பே அதிமுக உறுப்பினர்களை 'ஏய்' என எச்சரித்தார். அந்த துணிச்சல், மக்கள் மத்தியில் அவருக்கு பெயரை வாங்கி தந்தாலும் சொந்த கட்சியில் எதிர்ப்பை கிளப்பியது. அவரது கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அதிமுவுக்கு தாவினர்.
ஆனால், அதன் பிறகு, அவர் எடுத்த ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்தது. 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, கூட்டணிக்கு பலத்தை தந்தாலும் அவரது கட்சிக்கு பெரும் இறங்குமுகத்தை தந்தது. கூட்டணியின் சார்பாக மற்ற கட்சிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டாலும் விஜயகாந்துக்கு தோல்வியே மிஞ்சியது.
2016ஆம் ஆண்டில் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தேமுதிக. தேர்தல் பிரச்சாரத்தில் பல்லைக் கடித்தது, தொண்டரை அடித்தது போன்ற விஜயகாந்த்தின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகின. அவரைக் கேலிக்குரியவராக மாற்றியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது. அனைத்து இடங்களிலும் தோல்வியே பரிசாக கிடைத்தது. அதன் பிறகுதான், உடல்நல பிரச்னை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார். அவரது கட்சியும் திராவிட கட்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கரைய தொடங்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக மாநில கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஒரு காலத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகளும் தங்களது கூட்டணியில் இணைக்க விரும்பிய விஜயகாந்தின் தேமுதிக, 2021 தேர்தலில் வேறு வழியின்றி அமமுக கூட்டணியில் இணைந்தது. அந்த தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக ஆட்சி அமைத்தது. திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட்டை இழந்தது.