துண்டிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை... இமாச்சல்-ஜம்முவை உலுக்கி வரும் வெள்ளம்.. மக்கள் பரிதவிப்பு
பனாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகார் – மனாலி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் பெருக்கெடுத்த பியாஸ் நதி, நெடுஞ்சாலையின் பல பாகங்களை அடித்துச் சென்றது

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடையறாத கனமழை பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பனாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சண்டிகார் – மனாலி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் பெருக்கெடுத்த பியாஸ் நதி, நெடுஞ்சாலையின் பல பாகங்களை அடித்துச் சென்றது. இதனால் முக்கிய சாலை இணைப்புகளை மீண்டும் தொடங்குவதற்காக பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
குல்லு மாவட்ட ஆட்சியர் டோருல் எஸ். ரவீஷ், “தொடர்ச்சியான மழையால் நெடுஞ்சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் நேற்று மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர்; தற்போது இடம்பெயர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து அலுவலர்களும் தரையில் பணி செய்து வருகின்றனர்” என்று எச்சரித்தார்.
பல மாவட்டங்களுக்கு IMD எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), சம்பா, காங்க்ரா, மண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை சிகப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி சம்பா, லாஹவுல்-ஸ்பீதி, காங்க்ரா, குல்லு, மண்டி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை மற்றும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஷிம்லா, மண்டிக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30–31 தேதிகளில் மண்டி, ஷிம்லா, சோலனுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, ஆகஸ்ட் 31ஆம் தேதி குல்லு, மண்டி, காங்க்ரா, ஷிம்லாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதிகளில் மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மூடப்பட்ட நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் சிக்கியுள்ளன. காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் கெட்டுப்போவது குறித்து லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “நான் இங்கே வந்தது நான்கு நாட்களாகிறது. சாலைகள் சேதமடைந்துள்ளன, டோல் வசூல் தொடர்கிறது, அதிகாரிகளிடமிருந்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. எங்களுடைய பொருட்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன” என டிரைவர் குர்விந்தர் சிங் கூறினார்.ர்.
ஜம்மு-காஷ்மீர்: வெள்ளத்தில் உயிரிழப்புகள்
ஜம்மு-காஷ்மீரிலும் மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. 10,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். படையினர், எஸ்.டி.ஆர்எப், காவல்துறை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கிஷ்த்வார் பகுதியில் மார்கி மற்றும் வர்வான் பள்ளத்தாக்குகளில் இருந்த வீடுகள், பாலங்களை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழையும் இடைவிடாமல் பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தாமதமாகி வருகிறது.
போக்குவரத்து முறைகள் பாதிப்பு
டாவி பாலம், சக்கி புல் பாதான்கோட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் மற்றும் சாலைபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேலம் நதி உட்பட, ஸ்ரீநகர், அனந்த்நாக் பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு வருகின்றனர்.






















