Hemangi Sakhi: பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் திருநங்கை துறவி.. ஸ்கெட்ச் போட்ட இந்து மகாசபா!
Hemangi Sakhi: வாரணாசியில் அனைவரையும் வியக்க வகையில் பிரதமர் மோடிக்கு எதிராக திருநங்கை துறவி ஒருவரை, அகில பாரத இந்து மகாசபா களமிறக்கியுள்ளது.
Hemangi Sakhi: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த முறையும் அதிகப்படியான இடங்களில் வெல்ல பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டை திரும்பி பார்க்க வைக்கும் வாரணாசி தொகுதி:
குஜராத் தனது சொந்த மாநிலமாக இருந்தாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக திகழ்வதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, வதோதரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மோடி, இரண்டையும் கைப்பற்றினார். பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு, வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.
கடந்த முறை போன்று, இந்த முறையும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பெரிய வெற்றியை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் களமிறங்குகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், வாரணாசியில் அனைவரையும் வியக்க வகையில் திருநங்கை துறவி ஒருவரை, அகில பாரத இந்து மகாசபா களமிறக்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக கின்னர் மகாமண்டலேஸ்வர் ஹேமங்கி சகி என்பவர் போட்டியிடுகிறார்.
யார் இந்த மகாமண்டலேஸ்வர் ஹேமங்கி சகி?
குஜராத்தில் உள்ள பரோடாவில் பிறந்தவர் ஹேமங்கி சகி. இவரது தந்தை திரைப்பட விநியோகஸ்தர் என்பதால் அவரது குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. கான்வென்ட் பள்ளியில் சிறிது காலம் சகி படித்ததாக கூறப்படுகிறது.
தனது பெற்றோர் இறந்த பிறகு பள்ளியை விட்டு இடைநிறுத்தம் செய்துள்ளார் சகி. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பகவான் கிருஷ்ணர் மேல் கொண்ட பக்தியால் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தார். இறுதியில் பிருந்தாவனத்திலேயே வசிக்க தொடங்கினார். பின்னர், ஹேமங்கி சகி மா என மக்கள் இவரை அழைக்க தொடங்கினர். பகவத் கீதையை உபன்யாசம் செய்யும் உலகின் முதல் திருநங்கை என்ற பெருமை சகியையே சாரும்.