ஞானவாபி வழக்கு.. வாரணாசி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. தொல்லியல் துறையின் ஆய்வால் திருப்பமா?
ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆய்வறிக்கையின் நகலை வழங்கலாமா? என்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது.
அயோத்தியை போல தொடர் சர்ச்சையை கிளப்பி வருவது ஞானவாபி மசூதி வழக்கு. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
தொடர் சர்ச்சையை ஏற்படுத்தும் ஞானவாபி வழக்கு:
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஞானவாபி மசூதியில் ஆய்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அது தொடர்பான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை சீலிடப்பட்ட கவரில் சமர்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டால், அது தேவையற்ற வதந்திகளுக்கு வழிவகுக்கும் என்றும் தவறான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் என்றும் இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் கூறியது.
ஆனால், ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ், "ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிடலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆய்வறிக்கையின் நகலை வழங்கலாமா? வேண்டாமா? என்பது தொடர்பான முடிவும் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி எடுக்கப்படும்" என்றார்.
வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:
இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வு அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும், வழக்கின் பிற தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அறிக்கை, பொதுவெளியில் வெளியிடப்படாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மசூதி தரப்பு வழக்கறிஞர் மும்தாஜ் அகமது பேசுகையில், "தரப்பினர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களுக்கு தொல்லியல் துறை அறிக்கையின் நகல் வழங்கப்படும் என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா, இந்த உத்தரவை பிறப்பித்தார்" என்றார்.
உத்தரவு குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "இன்று விசாரணை நடந்தது. உத்தரவின் நகலை வழக்கில் உள்ள தரப்பினருக்குக் கிடைக்கச் செய்வது குறித்து இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும். நீதிமன்றம் தனது உத்தரவில் என்ன எழுதுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தரப்பினருக்கு உத்தரவின் நகல்களை வழங்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது" என்றார்.