ஞானவாபி மசூதி... இந்து தரப்பினருக்கு பின்னடைவு... விஞ்ஞானப்பூர்வ ஆய்வுக்கு நீதிமன்றம் மறுப்பு
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற சிலை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. முன்னதாக, ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
Gyanvapi Case:
— Anshul Saxena (@AskAnshul) October 14, 2022
Varanasi Court has rejected the demand for carbon dating of 'Shivling' found in Gyanvapi mosque.
Anjuman Intezamia Masjid Committee opposed the carbon dating & said that it is not feasible and irrelevant.
ஆண்டு முழுவதும், மசூதி வளாகத்திற்குள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் இந்து பெண்கள் ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மசூதிக்கு உள்ளே வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், "மசூதிக்குள் 'சிவலிங்கம்' போன்ற சிலைக்கு சீல் வைத்து கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வை மேற்கொள்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேலும், மசூதி கட்டிடத்திற்கு ஏற்படும் எந்தத் தீங்கும் சிவலிங்கத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறும் செயலாகும்.
அதுமட்டுமின்றி, மத உணர்வுகளை புண்படுத்தும் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக கிடைக்கபோகும் தீர்வுக்கான வாய்ப்பை குறைக்கும்" என தெரிவித்தது.
கடந்த மாதம், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ள இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மசூதிக்கு உள்ளே சிலையை வழிபடுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதாகவும் அதற்கும் மசூதி கட்டிடத்திற்கும் தொடர்பில்லை என்றும் மசூதி கமிட்டி தெளிவுப்படுத்தியுள்ளது.
சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த வாரம், சிவலிங்கம் தொடர்பான விவகாரம் வழக்கின் ஒரு அங்கமா, விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா என நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்து பெண்கள் வழக்கு தொடர்வதற்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை எனக் கூறி மசூதி கமிட்டி மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சிலர் நம்பி வருகின்றனர். 1980கள் மற்றும் 90களில் பாஜக எழுப்பிய மசூதி பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை தவிர, அயோத்தி மற்றும் மதுரா மசூதி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.