Gujarat Election 2022: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்.. மீண்டும் களமிறங்கும் காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஜிக்னேஷ் மேவானி 2017-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குஜராத் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அவரது சொந்த சொந்த தொகுதியான வட்காமின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஜிக்னேஷ் மேவானி 2017 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத்தின் உனா பகுதியில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித்கள் மீது நிகழ்ந்த சாதிய வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து பேரணி நடத்தி கவனம் ஈர்த்தார் ஜிக்னேஷ் மேவானி. சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த எழுச்சிப் பேரணி நாடு முழுவதும் கவனமீர்த்தது.
சென்ற ஆண்டு மோடி குறித்த ட்வீட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பினார். தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் கன்ஹையா குமாருடன் இணைந்து தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.
#GujaratElections2022 LIVE:#Congress Releases Two More List Of Candidates, Fields #JigneshMevani From #Vadgam
— ABP LIVE (@abplive) November 14, 2022
Updates: https://t.co/I95Wwvz4gf pic.twitter.com/mCRNThzgsk
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான வட்காம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜிக்னேஷ் மேவானி களமிறங்குகிறார். குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் இதுவரை மொத்தம் 142 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட்டது, தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.