Gujarat Election 2022: குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 4 கி.மீ.க்கு ஓர் அதிநவீனப் பள்ளி; ஆம் ஆத்மி வாக்குறுதி
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஓர் அதிநவீனப் பள்ளி உருவாக்கப்படும் என்று மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஓர் அதிநவீனப் பள்ளி உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மணிஷ் சிசோடியா இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசி உள்ளதாவது:
''குஜராத் மக்கள் தங்களின் குழந்தைகளுக்காக நல்ல பள்ளிகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். தங்களுக்குப் பள்ளிகள் கட்டித் தரும் கட்சியைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
சிபிஐ என்னிடம் விசாரணை நடத்தி கைது செய்யத் திட்டமிட்டுள்ளது. நான் எல்லாவற்றுக்கும், ஏன் சிறை செல்லவும் கூடத் தயாராக உள்ளேன். ஆனால் குஜராத்தில் பள்ளிகள் கட்டப்படுவது நிற்காது.
குஜராத்தில் உள்ள 48 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், 32 ஆயிரம் பள்ளிகள் மோசமான சூழ்நிலையில் உள்ளன. ஆம் ஆத்மி குழு மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அகமதாபாத், சூரத், வதோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய 8 நகரங்களில், ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு பள்ளி உருவாக்கப்படும்.
அவை தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதி நவீனத் தரத்தில் இருக்கும். கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில் 27 ஆண்டுகளாக பள்ளிகள் மேம்பாடு தொடர்பாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
மாநிலம் முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். ஆனால் பள்ளிகளின் கட்டமைப்பு, வசதிகள் குறித்து அந்த மாணவர்களின் பெற்றோர் குறை சொல்கின்றனர். இதுதவிர 53 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மொத்தத்தில், ஒரு கோடி குஜராத் மாணவர்களின் எதிர்காலம் பயங்கரமானதாக உள்ளது. 18 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகள் கூட இல்லை.
மாநில அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் போதுமான அளவு நியமிக்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. ஆம் ஆத்மி குஜராத்தில் ஆட்சி அமைத்தவுடன் அனைத்து காலி இடங்களும், ஓராண்டு காலத்துக்குள் நியமிக்கப்படும்''.
இவ்வாறு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் பாஜக உள்ளது.
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், குஜராஜ் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியோடும் முடிவடைய உள்ளது. எனினும், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி சி வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாஜக இந்தாண்டு சட்டபேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.