விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு..!
16 மாநில பல்கலைக்கழகங்களின் ஆய்வறிஞர்கள், 90 பாடப்படாத சுதந்திர வீரர்கள் பற்றி மேற்கொண்ட சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்த ஆளுநர், ஆய்வுக் குழுவுடனும் கலந்துரையாடினர்.
தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக்கழகங்களால் அடையாளம் காணப்பட்ட “அதிகம் பாடப்படாத/போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்” பற்றிய ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆய்வறிஞர்களுடன் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர், "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்களுடைய வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய சுதந்திரத்துக்காக தங்களுடைய விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் இதற்காக ஆய்வறிஞர்களால் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் அந்த சுதந்திர வீரர்களின் வாழ்க்கை வரலாறு, பங்களிப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தவும் எதிர்கால தலைமுறை அறியும் வகையிலும் பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
"இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவம் என்ற அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக தனது 75 வருட சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், பெரிதும் போற்றப்படாத அந்த சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வதும், இளைஞர்களை ஊக்குவிக்கும் அவர்களின் போராட்டத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் தேசத்துக்கான அவர்களின் மகத்தான பங்களிப்பைக் கௌரவிப்பதும் நமது கடமையாகும்" என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர், ஆராய்ச்சி அறிஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் 16 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டங்கள் சென்னை ராஜ்பவனில் மே 2, 2023 முதல் மே 18 2023 வரை நடைபெற்றது.
16 மாநில பல்கலைக்கழகங்களின் ஆய்வறிஞர்கள், 90 பாடப்படாத சுதந்திர வீரர்கள் பற்றி மேற்கொண்ட சிறப்பு ஆராய்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்த ஆளுநர், ஆய்வுக் குழுவுடனும் கலந்துரையாடினர்.
அப்போது, மாநில ஆவண காப்பகங்கள், தேசிய ஆவண காப்பகங்கள் மற்றும் செய்தி நிறுவன ஏஜென்சிகள், ஊடக ஏஜென்சிகள் பராமரித்து வரும் ஆவண காப்பகங்கள், இந்த விஷயத்தில் மேலதிக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு கூடுதல் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்றும் தமது மதிப்புமிக்க ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஆளுநர் வழங்கினார்.
அந்த காலகட்டத்தில் நிலவிய சமூக-அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பற்றியும் சுதந்திர இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புகள் பற்றியும் ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
பாடப்படாத அந்த கதாநாயகர்களின் வரலாறும் வாழ்க்கையும் உரிய முறையில் இந்திய கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ், துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்; டாக்டர் ஜி.ரவி, துணை வேந்தர் - அழகப்பா பல்கலைக்கழகம்; பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன், துணை வேந்தர் - அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.