Adani Criticised Hindenburg Report : ’எங்கள் நற்பெயரை கெடுக்கவே வெளியிடப்பட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை ..’ கடுமையாக சாடிய கௌதம் அதானி!
அதானி குழுமத்தின் 31வது ஆண்டு நடந்த வருடாந்திர கூட்டத்தின் போது ஹிண்டன்பர்க் அறிக்கையின் பொய் தன்மை குறித்து மீண்டும் ஒரு முறை சாடியுள்ளார் கவுதம் அதானி
அதானி குழுமத்தின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்காமல் இருப்பதாலும் அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசியுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி செய்ததாக அதானி குழுமம் மீது குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் அமளி தாங்க முடியாமல் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு ஹிண்டன்பர்க் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி குழுமத்தின் பங்குகள் விழ்ச்சி:
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி மாதம் 27 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் அதானி குழுமம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பங்குச் சந்தையில் சூழ்ச்சி செய்ததாகவும் தெரிவித்தது. அறிக்கை வெளியான நாள் அன்றே அதானி குழுமத்தின் பங்குகள் சரியத் தொடங்கியது. அதிலும் முக்கியமாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் இருந்த அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார். இந்த அறிக்கை அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் இந்திய நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிண்டன்பர்க்கிற்கு அதானியின் பதிலடி:
அதானி குழுமத்தின் 31வது ஆண்டு வருடாந்திர கூட்டத்தின் போது ஹிண்டன்பர்க்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி. அப்போது அவர் கூறியதாவது “அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், நற்பெயரை கொடுப்பதற்காகவும் உள்நோக்கத்துடன் வெளியிடபட்ட அறிக்கைதான் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை. நாம் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பொது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதை தடுக்கும் நோக்கில் பிறழ் தகவல்களையும், திட்டமிட்ட பிறழ் தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கைதான் ஹிண்டன்பர்க்கின் அறிக்கை. அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிகாரிகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க்கின் நோக்கம் அதானி குழுமத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கவே” என்று சாடியுள்ளார்.