Manipur Violence: சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..!
காக்சிங் மாவட்டத்தில் உள்ள செரோவ் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் 80 வயது மனைவியை அவரது வீட்டுக்குள் அடைத்து வைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தீ வைத்து கொளுத்தியுள்ளது.
மணிப்பூரில் நம்ப முடியாக அளவுக்கு பல கொடூரமான சம்பவங்கள், வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்களில் ஒருவரின் கணவர் இந்தியா ராணுவ வீரர் என்பது பின்னர் தெரிய வந்தது. நாட்டுக்காக போராடியவரின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியகது.
மணிப்பூரில் மீண்டும் கொடூரம்:
இந்த நிலையில், மனதை உலுக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. காக்சிங் மாவட்டத்தில் உள்ள செரோவ் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் 80 வயது மனைவியை அவரது வீட்டுக்குள் அடைத்து வைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செரோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரோடு எரிக்கப்பட்ட மூதாட்டியின் கணவர் எஸ். சுராசந்த் சிங். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமால் கௌரவிக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். செரோ கிராமம், கடும் வன்முறையாலும் துப்பாக்கிச்சூட்டாலும் பாதிக்கப்புக்குள்ளான சமயத்தில், இந்த சம்பவம் மே 28 அதிகாலையில் நடந்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை:
தனது கொள்ளு பாட்டி இபெடோம்பிக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்த பிரேம்காந்தா, "எனது கிராமத்தை சிலர் தாக்கினர். அப்போது, பாட்டி இருந்த வீட்டின் வெளியே கதவை பூட்டிவிட்டு அவர்கள் அதற்கு தீ வைத்தனர். எனது குடும்பத்தினர் சென்று பாட்டியை காப்பாற்றுவதற்குள் தீயானது கட்டிடம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது.
நான் மயிரிழையில் மரணத்திலிருந்து தப்பினேன். பாட்டியைக் காப்பாற்ற முயன்றபோது தோட்டாக்கள் எனது கை மற்றும் தொடையில் பட்டன.
நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, என் பாட்டி எங்களை இப்போது ஓடிவிடுமாறும், சிறிது நேரம் கழித்து தன்னை வந்து காப்பாற்றுமாறும் சொன்னார். துரதிர்ஷ்டவசமாக அது அவருடைய கடைசி வார்த்தைகளாக மாறிவிட்டன" என்றார்.
சம்பவத்தன்று நடந்த கொடூரத்தை விளக்கிய இபெடோம்பியின் மருமகள் தம்பக்சனா, "எம்.எல்.ஏ வீட்டில் தஞ்சம் அடைந்த நாங்கள், கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் அங்கு சென்றடைந்தோம். அதிகாலை 2.10 மணியளவில், நாங்கள் பயந்து ஓடிவிட்டோம். முதலில் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுமாறு இபெடோம்பி சொன்னார்.
நடந்தது என்ன?
பின்னர், அவரை காப்பாற்ற யாரையாவது அனுப்ப வேண்டும் என்றார். துப்பாக்கிச் சூடு தொடர்ந்ததால் பயந்துபோய், எங்கள் உள்ளூர் எம்.எல்.ஏ. வீட்டில் நாங்கள் தஞ்சம் அடைந்தோம். பிறகு, காலை 5.30-6 மணிக்கு மகன்களை அனுப்பி அவரை மீட்கச் சொன்னோம். அவர்கள் செல்வதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது" என்றார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள செரோ, கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடிப்பதற்கு முன்பு, ஒரு அழகிய கிராமமாக காட்சியளித்தது. ஆனால், தற்போது அந்த கிராமத்தில் எரிந்த வீடுகளும், குண்டு துளைக்கப்பட்ட சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பழங்குடியினர் (ST) அந்தஸ்தை கேட்டு போராடிவரும் மெய்தி சமூகத்திற்கும், அதை எதிர்த்து வரும் குக்கி பழங்குடி சமூகத்திற்கு இடையே நடந்து வரும் இனக்கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று செரோ.