Congress Mps Resign : ’ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு’ காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு ?
’காலை 10.30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் அனைவரும் ராஜினாமா செய்வது குறித்தும் அடுத்தக் கட்ட போராட்டம் பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர்’

மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்யத் திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

ராஜினாமாவா, இல்லையா ? இன்று காலை முடிவு
இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படியான ஒரு முடிவுவை காங்கிரஸ் கட்சி எடுத்தால், அது உலக நாடுகள் அளவில் விவாத பொருளாகி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைமை நினைப்பதாக தெரிகிறது.
தீ பற்றி எரியும் போராட்டம்
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்கள் பெயருக்கு பின்னாலும் மோடி இருப்பது ஏன் என்ற விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு, மோடி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை உடனடியாக பறித்து, அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், பல்வேறு மாநிலங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்னதாக, கேரளாவிலும் கர்நாடகாவிலும் தீ பந்தத்தை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதோடு, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர்.
’மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவு’
இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க அவசர அவசரமாக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக, ராகுல் காந்திக்கு நேர்ந்த ஜனநாயக விரோத செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து மத்திய பாஜக அரசை ஆட்டம் காண வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்து காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக அமையும் என்றும் காங்கிரஸ் தலைமை கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
If they decide to resign in toto that would be a master stroke. It’s international headline and Vishwaguru’s image will become murderer of democracy. https://t.co/8gQeW90Jhm
— Savukku Shankar (@Veera284) March 28, 2023
ஆனாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ராஜினமா செய்வதை ராகுல்காந்தி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால், நாடாளுமன்றத்தில் பாஜக-வை எதிர்க்கு குரல் எழுப்ப பெரிய அளவில் வலிமை இருக்காது என்று அவர் நினைப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், சட்டப்போராட்டத்தையும் அதே நேரத்தில் ஜனநாயக ரீதியாக மக்கள் செல்வாக்கையும் பெரும் விதத்தில் களப்போராட்டத்தை மட்டும் நடத்தலாம் என்று அவர் யோசனை சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன முடிவை எடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

