Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இண்டிகோ பிரச்னையால் விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், அதை தடுக்கும் விதமாக கட்டண உச்சவரம்பை நிர்ணயித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இண்டிகோ அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான சேவை முடங்கியுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற விமான கட்டணங்கள் உயர்ந்தன. இதையடுத்து, கட்டண உயர்வை தடுக்கும் நோக்கில், கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், இண்டிகோ நிறுவன அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இண்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்
நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை முடங்கியுள்ளது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால், இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1,000-த்திற்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தின. இதையடுத்து, இண்டிகோ பிரச்னைக்கு நடுவே விமான கட்டணங்கள் உயர்வதை தடுக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, விமான வழித்தடங்களின் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
கட்டண உச்சவரம்பை நிர்ணயித்த மத்திய அரசு
இது குறித்து மத்திய அரசு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, குறுகிய உள்நாட்டு வழித்தடங்களில் 500 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 7,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், 500 முதல் 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை 12,000 ரூபாயும், 1000 முதல் 1500 கிலோ மீட்டர் தூரம் வரை 15,000 ரூபாய் மற்றும் 1,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் 18,000 ரூபாய் வரை கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உச்சவரம்புகளில் UDF, PSF மற்றும் வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வகுப்பு கட்டணங்கள் மற்றும் RCS-UDAN விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் சீராகும் வரை கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த உத்தரவு அனைத்து முன்பதிவு தளங்கள், விமான வலைத்தளங்கள் மற்றும் முன்பதிவு செயலிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண இணையதளங்களுடன் நிகழ்நேர தரவு மற்றும் தீவிர ஒருங்கிணைப்பு மூலம் கட்டண நிலைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து ஏதேனும் விலகல் ஏற்பட்டால், பொது நலனைக் கருத்தில் கொண்டு உடனடி திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
இண்டிகோ நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன்
குறைந்தது ஐந்து நாட்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான விமான ரத்துக்கள் மற்றும் தாமதங்கள், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததை அடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்துள்ளது. நிலைமை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





















