"இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை" ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா
இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை"
இந்த நிலையில், இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயிலுக்காக உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறேன். அது இப்போது தயாராக உள்ளது.
இந்துக்களுக்கு மட்டுமே ராமர் சொந்தமானவர் அல்ல என்பதை நான் முழு தேசத்திற்கும் சொல்ல விரும்புகிறேன். அவர் உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர் இறைவன். இது புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற தத்துவங்களை வழங்கியவர் பகவான் ராமர்.
மதம், இனம் என அனைத்தையும் தாண்டி வீழ்ந்தவர்களை தூக்கி விட வேண்டும் என அவர் போதிக்கிறார். உலகளாவிய போதனையை தந்துள்ளார். இக்கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என நாட்டு மக்களை வேண்டி கொள்கிறேன். சகோதரத்துவத்தை பேணுங்கள் என்று எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
ராமர் கோயிலுக்கு அழைக்கப்பட்ட பிரபலங்கள்:
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.