Wrestlers Protest : பாஜக எம்பிக்கு எதிராக தேதி குறித்த விவசாய சங்க தலைவர்கள்.. மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பு..!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய சங்கங்கள் ஏற்கனவே தங்களின் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், தற்போது தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் ஆகியோருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
தடாலடி அறிவிப்பு:
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய சங்கங்கள் ஏற்கனவே தங்களின் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், தற்போது தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் பெரிய போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் கூறுகையில், "மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) கைது செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இல்லையெனில், மல்யுத்த வீரர்களுடன் ஜூன் 9ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்துவோம். மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய வேண்டும்" என்றார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்:
உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் நேற்று தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இந்திய நாட்டிற்காக பல பதக்கங்களை தேசிய அளவில் வென்று கொடுத்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் ஆண்டுக்கணக்கில் பயிற்சி செய்து மிகவும் போராடி வாங்கிய தங்களது பதக்கங்களை கங்கை நதியில் நேற்று வீச முயற்சி செய்தனர்.
தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசச்சென்ற அவர்களை, பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகாயித், சமாதானப்படுத்தி தடுத்தி நிறுத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ் பூஷண் சிங்கை 5 நாள்களுக்குள் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் அவகாசம் வழங்கினார்.
பிரிஜ் பூஷன் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்கள் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தரப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை, மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டன.
ஆனால், அந்த செய்திக்கு டெல்லி காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. "மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கில் இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்த செய்தியை சில ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்தது.