Congress: 5 மணி நேர மீட்டிங்.. உருகி பேசிய சோனியா.. தேற்றிய நிர்வாகிகள்! காங்., கூட்டத்தில் நடந்தது என்ன?
5 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத்தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், 5 மாநிலங்களிலும் படுதோல்வியடைந்தது. குறிப்பாக பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் அதையும் இழந்தது. இதனால் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக சுருங்கியது.
இதனையடுத்து காங்கிரஸின் தோல்வி குறித்து விவாதிக்க காரிய கமிட்டி கூட்டம் நேற்று கூடியது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கவிருக்கும் முடிவுகள் குறித்து அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு 57 காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, சல்மான் குர்ஷித், அஜய் மகேன், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, மேலும் 3 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
5 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தி பேசுகையில் கட்சிக்காக நான், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 3 பேரும் எந்த வித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். குறிப்பாக கட்சி நலனுக்காக எங்கள் குடும்பம் சில மாதங்கள் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும் தயார் எனவும் பேசியுள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த நிர்வாகிகள் சோனியா காந்தி தலைமையிலேயே காங்கிரஸ் செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியை முன்னின்று வழிநடத்துவது தான் சரியாக இருக்கும் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ராஜினாமா முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதோடு, இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி, உத்தரபிரதேச தேர்தல், உத்தரகாண்ட் தேர்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் நீக்கப்பட்ட காலம் சரியானது அல்ல. அவரை நீக்க வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே நீக்கியிருக்க வேண்டும். தேர்தலுக்கு மிக அருகில் நீக்கியது தவறு என்பதை சுட்டிக்காட்டியதாகவும், சோனியா காந்தி தனது தவறை ஆமோதித்ததாகவும் கூறப்படுகிறது.
பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் எதிர் கட்சியாக பல மாநிலங்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது வலுவான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுப்பது பற்றியும், அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேச தேர்தலில் பிரசாரத்திற்காக பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சச்சின் பைலட் உள்பட சில முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் கல்ந்துகொள்ளவில்லை என்று பிரியங்காகாந்தி இந்த கூட்டத்தில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் மாநில தலைமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பிற கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாஜக எப்படி தன்னை தேர்தல்களுக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்கிறதோ, அதே போன்று காங்கிரசும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தேர்தலை எதிர்கொள்ளும் முறைகளில் மாற்றம் மற்றும் கட்சியினுள் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என்றும் கருத்துகள் பரிமாறப்பட்டிருக்கிறது.
அதேபோல், நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கும் பட்ஜெட் மீதான இரண்டாம் கட்ட விவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் காரிய கமிட்டிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட சில தலைவர்கள் ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ராகுல்காந்தி தலைவராக இருந்தால்தான் பயனளிக்கும் என்றும் அவர்கள் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆக மொத்தத்தில் இந்த கூட்டத்தில் சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதைத் தவிர வேறு எந்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.