Fact Check: சிறுவனை சிறைப்படுத்தியதா கேரள காவல்துறை? வைரலான வீடியோ.. என்ன நடந்தது..?
கேரள பேருந்து ஒன்றில் ஒரு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுள்ள சிறுவன் ஒருவன் காவல்துறையை சேர்ந்த ஒருவரிடம் கை கூப்பி அழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
கேரளாவில் கார்த்திகை மாத சீசனை ஒட்டி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உலகப் புகழ்பெற்ற சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர யாத்திரை சீசன் இந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி துவங்கி ஜனவரி 2024 வரை நடைபெறும்.
சபரிமையில் வரலாறு காணாத வகையில் கூட்டம் குவிந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் நாளொன்று ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் சன்னிதானத்திற்கு வந்து ஐயப்பனை வணங்கி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை திணறுவதாகவும், இதனால் ஐயப்ப பக்தர்களை கொடுமை படுவதாகவும் செய்திகள் வெளிவருகிறது.
இப்படி ஒருபுறம் இருக்க கேரள பேருந்து ஒன்றில் ஒரு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுள்ள சிறுவன் ஒருவன் காவல்துறையை சேர்ந்த ஒருவரிடம் கை கூப்பி அழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதை பார்த்த சிலர், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கல் மீது கேரள அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வாகனத்திற்குள் குழந்தையை கட்டாயப்படுத்தி காவல்துறை ஏற்றி செல்வதாகவும் அந்த குழந்தை அழுவது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி கருத்து தெரிவித்து வந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திரப் பிரதேச இணைப் பொறுப்பாளர் சுனில் தியோதர் உட்பட பிற பயனர்களும் எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான கேரள அரசு 'இந்துக்களை தவறாக நடத்துகிறது'., கேரளாவில் இந்துக்களின் அவலநிலை, அங்கு அரசு அதிகாரிகள் பக்தர்களை ஒடுக்குகிறார்கள். குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை.”., என்று பதிவிட்டு வந்தனர்.
மேலும் ஒரு சிலர், "இந்த நாட்டில் இந்துக்களாகிய நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்து தர்மத்தைப் பின்பற்றியதற்காக எங்கள் குழந்தைகளுக்கு கேரளாவில் இப்படி நடக்கிறது." என்றும் பதிவிட்டு இருந்தனர்.
ஆனால், இப்படியான நிகழ்வுகள் எதுவும் அங்கு நடக்கவில்லை. உண்மையில் அங்கு என்ன நடந்தது? என்று என்பதை இங்கு விளக்கி கூறுகிறோம்.
Fack Check:
உண்மையில் என்ன நடந்தது..?
கடந்த டிசம்பர் 12ம் தேதி ஒரு சிறுவன், தனது தந்தையுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக கேரளாவை சேர்ந்த பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, அந்த தந்தை ஒரு சில பொருட்களை வாங்குவதற்காக சிறுவனை பேருந்திலேயே இருக்க சொல்லிவிட்டு, கீழே இறங்கி சென்றுள்ளார். அவர் இறங்கி சென்ற சிறிதுநேரத்தில் பேருந்து புறப்பட தயாராகி மெல்ல நகர்ந்துள்ளது. தன் தந்தை வராததை கண்டு பயந்துபோன சிறுவன் ஜன்னல் அருகே வந்து ’அப்பா’ ‘அப்பா’ என்று கத்தியுள்ளான். சிறுவன் தொடர்ந்து கத்தவே, அருகிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஓடிவந்து குழந்தை அருகில் வந்து என்ன நடந்தது என்று கேட்டு சமாதானம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுவன் கை எடுத்து கூப்பி தனது தந்தையை காணவில்லை, கண்டு பிடித்து கொடுங்கள் என்று கெஞ்சியுள்ளான். அந்த நேரத்திற்குள் அங்கு வந்த சிறுவனின் தந்தை தான் வந்துவிட்டதாக கூறி சமாதானம் செய்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய கேரள பம்பை காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, “நிலக்கலில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பேருந்தில் சிறுவனின் தந்தையால் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்தில் ஏற முடியவில்லை. அதனால், சிறுவன் தனது தந்தையைத் தேடி கண்டுபிடிக்கும்படி காவல்துறை அதிகாரியிடம் அழுதான்” என்று தெரிவித்தார்.
அந்த வீடியோ கேரளாவைச் சேர்ந்தது என்பதை உறுதிசெய்ய, வாகனப் பதிவுக் குறியீடு 'KL-15' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த வாகனத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் லோகோவும் இருந்தது.