ராணுவக் கூட்டணியில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை - ஜெயஷங்கர்
ராணுவக் கூட்டணியில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயஷங்கர் உரையாற்றினார்.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் ரைசினா பேச்சுவார்த்தையின் ஆறாவது பதிப்பு, கடந்த 13ம் தேதி தொடங்கியது.
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஏவ்ஸ் லீ டிரையன் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான மரைஸ் பெய்ன் விருந்தினர்களாக பங்கேற்ற காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயஷங்கர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், " இந்தோ-பசிபிக் பிராந்தியம் சமீபத்திய காலங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்த கட்டமைப்பு பனிப்போர் காலத்தை வலுப்படுத்துவதாக அமையாது, மாறாக அதிலிருந்து மீளும் ஒரு முயற்சியாக அமையும்" என்று தெரிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க ஆகிய நான்கு நாடுகள் ‘க்வாட்’ எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் மெய்நிகர் உச்சி மாநாட்டை சமீபத்தில் நடத்தியது. ‘க்வாட்’ அமைப்பு ஒருவகையான ராணுவக் கூட்டணி என்றும் 'ஆசியாவின் நேட்டோ' என்ற கருத்தும் மேலோங்கியது.
இதற்கு விளக்கம் அளித்த ஜெய்ஷங்கர், " இது முற்றிலும் தவறானது. 'ஆசிய நேட்டோ' போன்ற சொல்லாடல் அதிகப்படியானது,” என்று தெரிவித்தார்.
இந்திய- பசிபிக் பகுதியில் தடையற்ற, திறந்தவெளி போக்குவரத்தில் நான்கு நாடுகள் உறுதித்தன்மையினாலும் ஒன்றிணைந்துள்ளோம் என்று தெரிவித்தார். தடுப்பூசிகள், பருவநிலை மாற்றம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், மாணவர்கள் உயர்க்கல்வி, கடல்சார் பாதுகாப்பு , தீவிரவாதம் அச்சுறுத்த ஆகிய திட்டங்கள், சர்வதேச நன்மைக்கான சக்தியாக, க்வாட் அமைப்பை மாற்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.
க்வாட் அமைப்பு பற்றி:
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் ‘க்வாட்’ எனப்படும் நாற்கர கூட்டமைப்பை புதுப்பித்தனர், இதன் முதலாவது மெய்நிகர் உச்சி மாநாடு கடந்த மார்ச் 12-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்பங்கேற்றனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவுக்கு எதிராக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். .