MP Exit Poll: மத்திய பிரதேசத்தில் அடித்து ஆடிய காங்கிரஸ்! பதுங்கி பாய்ந்ததா பாஜக? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Madhya Pradesh Exit Poll Results 2023: ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.
மத்திய பிரதேசம்:
ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 15 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 17ஆம் நடந்த வாக்குப்பதிவில் 76.22 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மத்திய பிரதேச அரசியலில் திருப்பம் ஏற்படுமா?
இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 113 முதல் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, 88 முதல் 112 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 1 முதல் 5 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் 44.1 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாஜக 40.7 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்தர்.
யார் முதலமைச்சராக வர வேண்டும்?
யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு ஆதரவாக 42.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவாக 38 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆட்சி மாற்றம் நடக்க வேண்டுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாங்கள் கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் நடந்தே தீர வேண்டும் என 55.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர். மாநில அரசின் மீது கோபமாக இருக்கிறோம், ஆனால், ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 6.1 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர். மாநில அரசின் மீது கோபம் இல்லை, ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 38.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர்.