PM Modi Retweet | ”எக்சலண்ட்” : 3000 கலைமான்கள் ஒரே இடத்தில்... வீடியோவை ரீட்வீட் செய்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சாலையை ஆயிரக்கணக்கான அரியவகை பிளாக்பக் மான்கள்(கலைமான்கள்) கடக்கும் காட்சியைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சாலையை ஆயிரக்கணக்கான அரியவகை பிளாக்பக் மான்கள் கடக்கும் காட்சியைப் பகிர்ந்துள்ளார். வெலவாடர் தேசிய பூங்கா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவை பிரதமர் மோடி ரீட்வீட் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்கா முழுக்க முழுக்க அழிந்துவரும் மானினமான பிளாக்பக் மான்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் மான்களுடன் பல்வேறு புல்லினங்களும் உள்ளன. அதுதவிர அக்டோபரில் தொடங்கும் வலசை காலத்தில் வெளிநாட்டுப் பறவைகளான ஃப்ளெமிங்கோ மற்றும் பெலிக்கன்கள் இங்கே அதிகளவில் வருவதுண்டு.
ஆகச்சிறப்பு! பிரதமர் மோடி, வெலாவாடர் ப்ளாக்பக் தேசியப் பூங்காவில் உள்ள சாலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் துள்ளிப்பாயும் மான்களின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் 'எக்ஸலன்ட்' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 3000 மான்கள் இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் மயிலுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் மயிலும், வாத்தும் உலாவரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், அவர் தற்போது ஷேர் செய்துள்ள இயற்கையின் வரத்தின் சாட்சியான காட்சி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
அழிவின் விளிம்பில் பிளாக்பக் மான்கள்:
ஒருகாலத்தில் மந்தை மந்தையாக இருந்த பிளாக் பக் மானினம் தற்போது அழிவு நிலையில் உயிரினம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வனத்துறை சட்டம் 1972ன் படி இந்த வகை மான் பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தது. இதனை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டை, காடுகள் அழிப்பு, வசிப்பிடம் சுருக்கம் ஆகியன காரணங்களாலேயே இந்த வகை மான் இனங்கள் அழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட இந்த வகை மான்கள் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அதனாலேயே பாவ்நகரில் வெலவாடர் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. கம்பத் வளைகுடா பகுதியை ஒட்டி இந்த தேசியப் பூங்கா அமைந்துள்ளது.
Excellent! https://t.co/9xxNLllQtP
— Narendra Modi (@narendramodi) July 28, 2021
பிளாக் பக் மானும் சல்மானும்..
பிளாக் பக் மான் என்றதும் பாலிவுட் நடிகர் சல்மானும் சட்டென நினைவுக்கு வந்து செல்கிறார். காரணம், பிளாக் பக் மான் வேட்டையில் அவர் சிக்கியது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் சூட்டிங் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான் நடிகை கள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள கன்கனி வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கி யால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து சல்மான் கான் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.