பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
வடமேற்கு மும்பை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) ஹேக் செய்துவிட்டதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) OTP மூலம் திறக்க முடியாது என்றும் எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. EVMஐ ஹேக் செய்துவிட்டதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அவற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள வடமேற்கு மும்பை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை சேர்ந்த ரவீந்தர வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பற்றி எரியும் EVM விவகாரம்: சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தது தொடர் சர்ச்சையை கிளப்பி வந்தது. இதனிடையே ரவீந்தர வைகரின் உறவினர் மங்கேஸ் பண்டில்கர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பல வேட்பாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், ஷிண்டே சிவசேனா கட்சியை சேர்ந்த ரவீந்திர வைகரின் உறவினர் மீது மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தடையை மீறி மொபைல் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதனுடன், மங்கேஷ் பாண்டில்கரிடம் மொபைல் போனை கொடுத்த தேர்தல் கமிஷன் ஊழியர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
OTP மூலம் EVM திறக்கப்பட்டதா? இப்படிப்பட்ட சூழலில், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனது மொபைல் போன் மூலம் இயக்கியதாக மங்கேஷ் பாண்டில்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில், , எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி கூறியதாவது, ”இன்று வந்த செய்தி குறித்து சிலர் ட்வீட் செய்தனர்.
EVMஐ OTP வைத்து திறக்க முடியாது. பட்டனை தட்டுவதன் மூலம் மட்டுமே முடிவுகள் கிடைக்கிறது. EVM கருவி எதனுடனும் இணைக்கப்படவில்லை. முற்றிலும் தவறான செய்தியை நாளிதழ் வெளியிட்டுள்ளது. EVM என்பது ஒரு தனி கருவி. அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று அந்தத் நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். EVMஐ வயர்லெஸ் கருவி மூலமோ வயர்ட் கருவி மூலமோ தொடர்பு கொள்ள முடியாது" என்றார்.
தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்: வாக்கு எண்ணும் மையத்தில் மொபைல் போனை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி, "ஜோகேஸ்வரி சட்டமன்றத் தொகுதியின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தினேஷ் குரவின் மொபைல் போன், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வர அனுமதி பெறாத நபரின் கையில் சிக்கி இருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டேட்டா என்ட்ரியும் வாக்கு எண்ணிக்கையும் இரண்டு வெவ்வேறு செயல்முறைகளை கொண்டிருக்கிறது. டேட்டா என்ட்ரி செய்யும் கருவியை திறக்க துணை தேர்தல் அதிகாரிக்கு OTP தேவைப்படுகிறது. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை.
மொபைல் போனை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்கும் இதற்கும் தொடர்பில்லை. இது, துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகளும் வலுவான நிர்வாக பாதுகாப்பு அம்சங்களும் தேர்தலில் முறைகேடு நடப்பதை தடுக்கின்றன" என்றார்.