(Source: ECI/ABP News/ABP Majha)
Eknath Shinde : ஆட்டோ ஓட்டுநர் - முதலமைச்சர்.. உயிரிழந்த குழந்தைகளை நினைத்து கதறியழுத ஏக்நாத் ஷிண்டே!
தன் குடும்பத்தினரை இழந்து, தான் தவித்து வந்தபோது தன்னை சிவசேனா தலைவர் ஆனந்த் திகே தான் தேற்றினார் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ஏக்நாத் ஷிண்டே தன் உயிரிழந்த குழந்தைகளை நினைவுகூர்ந்து கண்கலங்கியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்று (திங்கள் கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின், தனது பிரிவு சிவசேனா எம்எல்ஏக்களுடன், மும்பையில் உள்ள ஹோட்டலில் துணை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இங்கு நடந்த சபாநாயகர் தேர்தலில் பாஜக அணிக்கு 164 பேரும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வேட்பாளருக்கு 107 வாக்குகளும் கிடைத்துள்ளன. 16 பேர் பங்கேற்கவில்லை. அதாவது வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (ஜூலை.04) நடைபெற்றது.
வாக்களிக்காத 16 பேரும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கு வாக்களித்தாலும் கூட, ஷிண்டே அரசு வென்றுவிடும். எனவே இன்று நடக்கும் வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தைகள், தேற்றிய சிவசேனா தலைவர்
இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகத் தொடருவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், முன்னதாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய ஏக்நாத் ஷிண்டே தன் உயிரிழந்த இரண்டு குழந்தைகளை நினைவுகூர்ந்து தொண்டை திமிறி கண்கலங்கினார்.
மேலும், தன் குடும்பத்தினரை இழந்து தான் தவித்து வந்த போது தன்னை சிவசேனா தலைவர் ஆனந்த் டிகே தான் தேற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் - முதலமைச்சர்
ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே 80களில் தானே மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவை சந்தித்துள்ளார். தொடர்ந்து சிவசேனாவில் இணைந்தவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கத் தொடங்கின.
தொடர்ந்து 1997ஆம் ஆண்டில் முதன்முதலாக, தானே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆனந்த் டிகே கவுன்சிலரானார். 2004ஆம் ஆண்டு முதல் தானேவில் உள்ள கோப்ரி - பக்பகாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்து ஏக்நாத் ஷிண்டே இருந்து வருகிறார்.
மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில், 2014 - 2019 வரை இருந்த பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியில், ஷிண்டே பொதுப்பணித் துறை அமைச்சராகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் நகர மேம்பாடு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷிண்டே தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ளார்.