Eknath Shinde: தானே முதல் கோட்டை வரை... மகாராஷ்டிர புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடந்த வந்த பாதை!
அதிருப்தி எம்எல்ஏக்களை குஜராத்தின் சூரத்தில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று கூட்டணி அரசுக்கு ஆட்டம் காட்டிய ஷிண்டே தானேவில் சிவசேனாவின் பிரபலமான தலைவராக உள்ளார்.
58 வயதான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாடி (MVA) அரசில் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், அவரது சகோதரர் பிரகாஷ் ஷிண்டே கவுன்சிலராகவும் உள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்களை குஜராத்தின் சூரத்தில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று கூட்டணி அரசுக்கு ஆட்டம் காட்டிய ஷிண்டே தானேவில் சிவசேனாவின் பிரபலமான தலைவராக உள்ளார். அங்கு கட்சியை வலுப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
1964ஆம் ஆண்டு பிறந்த ஷிண்டே, மராட்டிய சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் வாழ்வாதாரத்திற்காக கல்வியை சீக்கிரமே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், 2014ஆம் ஆண்டு, பாஜக-சிவசேனா அரசில் அமைச்சரான பிறகு, ஷிண்டே தனது படிப்பைத் தொடர்ந்தார். மகாராஷ்டிராவின் யஷ்வந்த்ராவ் சவான் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
ஷிண்டே, சிவசேனாவின் தலைவரான மறைந்த பால்தாக்கரே மற்றும் சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவர் ஆனந்த் டிகே ஆகியோரின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் சிவசேனாவில் சேர்ந்தார்.
1997இல் தானே நகராட்சி தேர்தலில் முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிண்டே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல், இவர் தானே நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002இல் இரண்டாவது முறையாக தானே நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.
இவர், 2004 ஆம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தானேயின் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். 2005 ஆம் ஆண்டில், சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இம்மாதிரியான கட்சியின் செல்வாக்கு மிக்க பதவியில் நியமிக்கப்பட்ட முதல் எம்எல்ஏ இவரே ஆவார்.
ஷிண்டே 2014 வெற்றிக்குப் பிறகு சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் உத்தவ் தாக்கரே நவம்பர் 2019 இல் கூட்டணி அரசின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஷிண்டே நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஜூன் 21ஆம் தேதி தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த பிறகு சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக நீக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு, கூட்டணி அரசில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பொதுப்பணிகளுக்கான அமைச்சராக ஷிண்டே நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தற்போது நகர்ப்புற விவகார அமைச்சராக உள்ளார். கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதால் சிவசேனா தலைமை மீது ஷிண்டே அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்