Bihar: ஒரு பக்கம் மகன்.. மறுபக்கம் தம்பி.. நடுவில் சிக்கித் தவிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி!
ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு மகன் சிராக் பாஸ்வானும், அவரது சகோதரரும் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் அகியோர் லோக் ஜன சக்தி கட்சிக்கு உரிமைக்கோரி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் பெயரையும் அதன் சின்னத்தையும் பயன்படுத்த, அவரது மகன் சிராக் பாஸ்வான் மற்றும் அவரது சகோதரருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சிராக் பாஸ்வானும், அவரது சகோதரரும் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் அகியோர் லோக் ஜன சக்தி கட்சிக்கு உரிமைக்கோரி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பசுபதி பராஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதமொன்றை எழுதினார். அதில் லோக் ஜன சக்தி கட்சியின் நாடாளுமன்ற தலைவரான தனக்குதான் அதிக எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது, எனவே தனக்குதான் கட்சியின் மீது உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிராக் பஸ்வானும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் என்று பசுபதிகுமார் குறிப்பிட்டது உண்மையில்லை. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இருவரும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் விரைந்து முடிவு எடுக்கக் வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் பிகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி குஷேஸ்வர்தன் மற்றும் தாராபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவின் காரணமாக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நவம்பர் 2ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து யாருக்கு கட்சியின் சின்னம் என இருதரப்பினருக்கும் இடையே கட்சியின் சின்னத்தைப் பெறுவதில் போட்டி நிலவி வந்தது.
இதையடுத்து லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் சின்னமான பங்களாவையும், அதன் பெயரையும் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. எதிர்வரும் இடைத்தேர்தலில் சிராக் பாஸ்வான், பசுபதி குமார் பராஸ் ஆகிய இருவரும் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் அவர்களுடைய கட்சி பெயரில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் கட்சியின் பெயர், 3 விதமான சின்னங்களைத் தேர்வு செய்து வரும் திங்கட்கிழமை பிற்பகலுக்குள் இரு தரப்பினரும் தனித்தனியாகத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும், அதன் பின்னர் சின்னம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.