பேருந்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை நபர்..! கர்நாடகாவில் அரங்கேறிய அவலம்
கர்நாடகாவில் பேருந்தில் பெண் பயணியின் இருக்கையின் மீது சிறுநீர் கழித்த நபர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பேருந்தில் பெண் பயணியின் இருக்கையின் மீது மற்றொரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று புதன்கிழமை விஜயபூரில் இருந்து மங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பெண் பயணி மீது சிறுநீர்:
அந்தப் பேருந்து சரியாக இரவு 10 மணியளவில் பயணிகள் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நின்றுள்ளது. அப்போது அதிலிருந்த பெண் பயணி ஒருவர் கீழே இறங்கிச் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பினார். அப்போது பின் இருக்கையில் இருந்த ஆண் ஒருவர் அந்தப் பெண் அமர்ந்திருந்த இருக்கையின் மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ந்துபோனார்.
பேருந்தில் இருந்த சிலரும் அந்த சம்பவத்தைப் பார்த்துள்ளனர். பின்னர் எல்லோரும் இணைந்து ஓட்டுநர், நடத்துனரிடம் நடந்ததைச் சொல்ல. அந்த நபரை பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டனர். அந்த இருக்கை சுத்தம் செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இருக்கை வழங்கப்பட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் தகவல் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியில் கசிந்தது. இதனையடுத்து சம்பவம் நடந்ததை கர்நாடகா போக்குவரத்துக் கழகமும் ஒப்புக் கொண்டுள்ளது.
அண்மையில் தான் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த விவகாரம் உலகம் முழுவதும் விவாதப் பொருளானது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் இன்னொரு சம்பவம் பேருந்தில் நடந்துள்ளது.
ஏர் இந்தியா சம்பவம்:
பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்தது. பணியை செய்யத் தவறியதற்காக விமானத்தின் பைலட் - இன் கமாண்டின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், விமானத்தை இயக்கிய விமானி, விமான குழுவினர் நான்கு பேருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும், விளக்கம் கேட்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான காம்ப்பெல் வில்சன் அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்தார்.
இந்த சம்பவம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதிய பிறகுதான், நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவ தினத்தன்று, சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என அந்த மூதாட்டி விமான குழுவிடம் கூறியுள்ளார். எனவே, அவருக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது இருக்கைக்குத் திரும்பும்படி மூதாட்டியிடம் விமான பணியாளர்கள் கூறியுள்ளனர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்திருக்கின்றனர்.
அதே இருக்கையில் அமர்வதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே, அவருக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் அங்கேயே அவர் படுத்து உறங்கி இருக்கிறார். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் அவருக்கு மாற்று இருக்கை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், "இந்த அனுபவங்கள் எங்களுக்கு வலியை தருகிறது. இந்த விவகாரத்தை சிறப்பாக கையாண்டு இருக்கலாம். எதிர்காலத்தில், இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க விமான பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான திட்டம் தொடங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது.