TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர் - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த டி.ஆர். பாலு
TR BALU DMK-BJP: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக - திமுக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், மக்களவையில் அமளி ஏற்பட்டது.
TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பேசிய டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். அப்போது, மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு, நித்யானந்த ராய் எம்.பி., ஆக இருக்கவே தகுதியற்றவர், அவருக்கு ஒழுக்கமாக இருப்பது எப்படி என கற்றுக் கொடுங்கள் என ஆவேசமாக பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை எப்படி தகுதியற்றவர் என கூறலாம் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் டி.ஆர். பாலுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக ஆவேசமாக பேச தொடங்கினார். இதனால், திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து, திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆ. ராசா குற்றச்சாட்டு:
முன்னதாக பேசிய திமுக எம்.பி., ஆ. ராசா, “மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு. மாநில பேரிடர் நிதி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு வழங்குவது தான். மாநில பேரிடர் நிதி வழங்கியதை வெள்ள நிவாரண நிதி வழங்கியதாக ஒன்றிய அமைச்சர் குழப்பி கொள்கிறார். வெள்ள சேதங்கள் தொடர்பான தமிழ்நாடு அரசு தந்த அறிக்கை மற்றும் ஒன்றிய அரசு குழு அளித்த அறிக்கை ஒன்றிய அரசிடம் உள்ளது. 2 அறிக்கைகள் கையில் உள்ளபோதும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுக்கிறது. குஜராத்தை போல அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக நடத்த வேண்டும். தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி தரும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுகிறது” என ஆவேசமாக பேசினார்.