Mainpuri: குடும்பத்தின் கோட்டையில் கொடி நாட்டபோகும் முலாயம் சிங்கின் மருமகள்...பாஜக வேட்பாளரை கதறவிட்ட சமாஜ்வாதி..!
மைன்பூரி தொகுதியை பொறுத்தவரை, 25 ஆண்டுகளுக்கு மேலாக சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது.
உத்தர பிரதேசத்தின் மூன்று முறை முதலமைச்சரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முலாயம் சிங். இவர், கடந்த அக்டோபர் மாதம் காலமானார்.
இதையடுத்து, இவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைன்பூரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இச்சூழலில், இதற்கான தேர்தல் டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டது.
மைன்பூரி தொகுதியை பொறுத்தவரை, 25 ஆண்டுகளுக்கு மேலாக சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. குறிப்பாக, இந்த தொகுதியில் மட்டும் முலாயம் சிங் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் பாரம்பரியமான வாக்காளர்களான இஸ்லாமியர்களும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்களும் இந்த தொகுதியில் அதிகம் வசிப்பதால், மற்ற கட்சிகளால் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக, இந்த தொகுதியின் வேட்பாளராக முலாயம் சிங்கின் மருமகளான டிம்பிள் சிங் அறிவிக்கப்பட்டார்.
எனவே, இந்த தொகுதியில் இந்த முறையும் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அகிலேஷ் யாதவின் குடும்பத்தில் பிரச்னை நிலவி வரும் நிலையில், அகிலேஷின் மாமாவான சிவபால் யாதவுக்கு நெருக்கமான ரகுராஜ் சிங் ஷக்யா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
#Mainpuri Lok Sabha by-polls | SP candidate Dimple Yadav leads with a total of 16,933 votes so far, counting continues.
— ANI (@ANI) December 8, 2022
(File photo) pic.twitter.com/3M7A2o0wGa
எனவே, தேர்தலில் அனல் பறக்கும் எனக் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் 51.89 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான முடிவுகள், குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில், எதிர்பார்த்தது போலவே, அகிலேஷின் மனைவி டிம்பிள் சிங் முன்னிலை வகித்து வருகிறார். கிட்டத்தட்ட 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அகிலேஷ் யாதவ் எம்எல்ஏவாக உள்ள கர்ஹால் தொகுதி மர்றும் சிவ்பால் யாதவ் எம்எல்ஏவாக உள்ள ஜஷ்வந்த நகர் தொகுதியில் அவர் முன்னிலை வகித்து வருகிறார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. முன்னதாக, தேர்தல் விதிகளை மீறியதாக சமாஜ்வாதி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு சுமத்தி கொண்டன.
ஆளும் கட்சியின் பேச்சை கேட்டு பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல, ரவுடிதனத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜக குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. இரு கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அணுகி புகார் அளித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரபிரதேசத்தில் மாநில தேர்தல்கள் நடைபெற்ற போது, பாஜக மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பாஜக விதிகளை மீறியதாக குற்றம் சாட்டினார்.