Dr Dilip Mahalanabis : மருத்துவ சேவைக்காக வாழ்நாளையே அர்ப்பணித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ் காலமானார்..!
மருத்துவர் திலீப் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1 கோடியை பார்க் சர்க்கஸில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர் இழப்பு பிரச்னைக்கு (dehydration) சிகிச்சை அளிக்கும் முறையின் பெயர்தான் வாய்வழி நீரேற்ற தீர்வு (Oral rehydration solutions) ஆகும். இந்த சிகிச்சை முறையின் செயல்திறனை நிரூபிக்க உதவிய மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ் தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது மேற்குவங்கம் பங்கானில் உள்ள அகதிகள் முகாமில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்வழி நீரேற்ற சிகிச்சை அளித்தவர் மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ் ஆவார்.
மருத்துவர் திலீப் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1 கோடியை பார்க் சர்க்கஸில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார். அந்தப் பணத்தில் குழந்தைகளுக்கான புதிய வார்டு கட்டப்பட்டது. அதற்கு அவரின் பெயரையும் அவரது மனைவி ஜெயந்தியின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அப்பல்லோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திலீப் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் அவர் காலமானதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவர் திலீப் குறித்து பொது சுகாதார நிபுணர் அபிஜித் சவுத்ரி பேசுகையில், "வரலாறு படைத்த மருத்துவர் தலீப். வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் எஸ்.என். டி, வாய்வழி நீரேற்ற சிகிச்சையின் செயல்திறனை சோதனை ரீதியாக நிரூபித்திருந்தார். ஆனால், திலீப்தான் பாங்கானில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள ஏராளமான மக்களுக்கு அதன் செயல்திறனை நிரூபித்தவர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, வாய்வழி நீரேற்ற தீர்வின் நன்மைகளை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டது. இது மருத்துவ அறிவியலின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். வங்காளத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் இதற்குப் பின்னால் இருந்தனர். பாங்கான் அகதிகள் முகாமில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்க்கரை, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கரைசலை தயாரித்து திலீப் ஒரு டிரம்மில் வைத்திருந்தார். அதன் பயனைப் பற்றி மக்களை நம்ப வைக்க, அவர் அதை வாய்வழி உப்புநீர் என்று அழைத்தார்.
அகதிகள் முகாமில் உள்ள மக்களிடம் பசி எடுக்கும் வரையோ அல்லது அவர்கள் பலவீனமாக உணராத வரையோ தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். இதன் மூலம் பலரை காலராவிலிருந்து குணப்படுத்தினார்" என்றார்.
வங்காளத்தைச் சேர்ந்த 105 மருத்துவர்களின் மகத்தான சாதனைகள் பற்றிய எக்ஷோ தரார் அலோ புத்தகத்தில் மஹாலனாபிஸின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரை உள்ளது. சவுத்ரி மற்றும் மற்றொரு மருத்துவர் அசோகனந்த கோனார் ஆகியோர் அந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.
1971 ஆம் ஆண்டு திலீப் பணிபுரிந்த முகாமில் நோயாளிகளுக்கு உப்பு நீர் வழங்கப்பட்டது. இதனால், மற்ற முகாம்களுடன் ஒப்பிடும்போது இறப்புகள் அங்கு மிகக் குறைவு என்று கட்டுரை கூறுகிறது. திலீப் பணியாற்றிய முகாமில், மக்கள் வாய்வழி கரைசலை குடித்தனர். 2007 இல், அவர் தாய்லாந்தால் கௌரவிக்கப்பட்டார்" என்றார்.