Karnataka: 'கர்நாடகாவில் சித்தராமையா மட்டும் தான் முதலமைச்சரா?’ கொந்தளித்த டி.கே.சிவக்குமார்..! என்ன நடந்தது?
கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் முதலமைச்சராக சித்தராமையா தொடர்வார் என மாநில அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்துக்கு துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.
கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் முதலமைச்சராக சித்தராமையா தொடர்வார் என மாநில அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்துக்கு துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.
கர்நாடகாவில் மாஸ் காட்டிய காங்கிரஸ்
கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக மாறியது. அக்கட்சியின் இந்த தேர்தல் வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முதலமைச்சர் தேர்வில் நீடித்த குழப்பம்
இதற்கிடையில் அனைவரது எதிர்பார்ப்பும் கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வியை நோக்கியே இருந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவுக்கும், மாநில தலைவரான டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டனர். கிட்டதட்ட ஒரு வாரம் முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்தது. இறுதியாக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து மே 20ம் தேதி பதவியேற்பு விழாவும் கோலாகலமாக நடந்தது.
முதலமைச்சர் பதவி குறித்து வெளியான தகவல்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையேயான போட்டியால் இருவருக்கும் தலா 30 மாதங்கள் முதலமைச்சர் பதவி என பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து டி.கே.சிவக்குமார் மாற்றப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்த மாநில அமைச்சர் எம்.பி.பாட்டீல், சித்தராமையா ஐந்தாண்டுகள் முழுவதுமாக முதலமைச்சராக நீடிப்பார் எனவும் ,அப்படி எதுவும் அதிகாரப்பகிர்வு இருந்திருந்தால் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பார் என கூறியிருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
டி.கே.சிவக்குமார் கொடுத்த பதில்
இந்த தகவலால் டி.கே.சிவக்குமார் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவரிடம், பாட்டீலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கருத்து தெரிவிக்க விரும்பாத டி.கே.சிவக்குமார், ‘யாரு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதனை கவனித்துக் கொள்ளும்’ என காட்டமாக பதிலளித்துள்ளார். இதனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.