Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்த நபர், ஹரியானாவில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதான மருத்துவரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.
டெல்லி கார் வெடிப்பு - சிக்கும் கும்பல்:
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான், இந்த சம்பத்தில் ஈடுபட்டவர்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் வெடிபொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. வெடிபொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படும் காரின் உரிமையாளர் தெற்கு புல்வாமாவைச் சேர்ந்த நபர் என்றும், அவருக்கும் இந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத தாக்குதலா?
கார் வெடிப்பு சம்பவமானது தீவிரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி காவல்துறை பயங்கரவாத செயல்கள் மற்றும் தொடர்புடைய தண்டனைகளை உள்ளடக்கிய சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவுகள் 16 மற்றும் 18, வெடிபொருள் தொடர்பான கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், சம்பவம் நடந்து 12 மணி நேரம் ஆன பிறகும் கூட இது விபத்தா? அல்லது தீவிரவாத தாக்குதலா? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர கதியில் தாக்குதல்?
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள இரண்டு வீடுகளில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறை குழுக்கள் ஆயிரக்கணக்கான கிலோ வெடிபொருட்களையும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றின. அந்த இரண்டு வீடுகளையும் டாக்டர் முஜம்மில் ஷகீல் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார். வெளியான தகவலின்படி, அந்த வீடுகளில் இருந்து 2,900 கிலோ சந்தேகத்திற்குரிய வெடிபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மருத்துவர்கள் முஜம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் அடில் ராதர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பீதியடைந்து, மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் காரை வைத்திருந்த டாக்டர் உமர் முகமது செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது. கார் வெடிப்புக்கு காரணமாக கருதப்படும் முகமது உமரின் தாய், சகோதரி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் சந்தேகம்?
செங்கோட்டை பயங்கரவாத தாக்குதலில் அதிக அளவு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் நம்புகின்றன. சோதனைகளில் மீட்கப்பட்ட பொருள் அம்மோனியம் நைட்ரேட்டாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது . இது உரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம். சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.





















