IAS Student Death: டெல்லி IAS பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி; உட்புகுந்த அரசியல் சண்டை..! என்ன நடக்கிறது ?
Delhi IAS Coaching Flood: டெல்லியில் IAS ஆக வேண்டும் என்ற கனவுகளோடு சென்ற மாணவர்கள், தனியார் பயிற்சி மையத்தின் வெள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ராவ்ஸ் ஐ.ஏ.எஸ் தனியார் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும் , இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகள் கனவோடு சென்ற மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மாணவர்களின் போராட்டமானது வலுத்து வரும் நிலையில், அரசியலும் புகுந்துள்ளது. என்ன பிரச்னை? என்ன நடக்கிறது என்பது குறித்து காண்போம்.
என்ன நடந்தது?:
தில்லி தீயணைப்புத் துறையின் (DFS) கூற்றுப்படி, டெல்லியில், நேற்று ( ஜூலை 27 ) கனமழை பெய்தது. நேற்று இரவு 7 மணியளவில் பயிற்சி மையத்திலிருந்து தண்ணீர் தேங்குவது குறித்து அழைப்பு வந்தது,
அங்கு சென்றபோது, பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மாணவர்கள் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அடித்தளம் மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கியது, மீட்பு பணி நள்ளிரவு கடந்தும் தொடர்ந்தது.
இரண்டு பெண் மாணவர்களின் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. சில மணி நேரங்களுக்கு பிறகு, மூன்றாவது மாணவரான ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது.
வெடிக்கும் போராட்டம் :
இந்நிலையில், மாண்வர்கள் இறப்புக்கு நீதி கேட்டும், அப்பகுதியின் வடிகால் நிலைமை குறித்தும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தீவிரமாகியுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சில பகுதிகளில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Image Source : X/@BattaKashmiri
அரசியல்:
இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ஆம் ஆத்மி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது ஒரு சம்பவம் அல்ல கொலை. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்க டெல்லிக்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் ஊழலுக்கு ஆளாகிறார்கள், அடித்தளத்தில் நூலகம் எவ்வாறு நிறுவப்பட்டது என்று யாரும் பதிலளிக்கவில்லை. டெல்லி அரசாங்கத்தின் முகர்ஜி நகரில் ஒரு சம்பவம் நடந்தது. விசாரணையில் என்ன நடந்தது" என்று டெல்லி பாஜக தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக், இந்த சம்பவத்திற்கு பாஜக மீது குற்றம் சாட்டினார்.
“இப்போது தண்ணீர் வடிந்து விட்டது. இது முழுக்க முழுக்க குற்றச் செயல், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் தூர்வாரப்பட்டது. மேலும் யாரேனும் பொறுப்பாக இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று பதக் கூறினார்.
நனவாகாத கனவுகள்:
நாட்டின் சேவை பணியில் அமர்வதற்காக தேர்வுக்கு பயிற்சி சென்ற மாணவர்கள், அவர்களுக்கு பல கனவுகள் இருந்திருக்கும், அவர்களது கனவு, அவர்களது மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தின் கனவாகவும் இருந்திருக்கும். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வு, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, அரசியல் செய்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.