Manish Sisodia Resignation: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ராஜினாமா... தொடர்ந்து அமைச்சரும் ராஜினாமா!
டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அரசு அமல்படுத்தியது. இதனடிப்படையில் டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.
ஆனால் மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனால் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கை அரசால் திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையில் , மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் பரிந்துரையின் பேரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் மணீஷ் சிசோடியா பலமுறை விசாரணைக்கு ஆஜரானார். அந்த வகையில் நேற்று முன்தினமும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜராகியிருந்தார். மணீஷ் சிசோடியாவிடம் கிட்டதட்ட 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இதேபோல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு மே 30 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டெல்லி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.