ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு என்ன?
சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான்.
சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்:
பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சட்ட போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் சஞ்சய் சிங், ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "சஞ்சய் சிங்கை சிறையில் வைத்திருப்பதால் எந்த பலனும் இல்லை" என குறிப்பிட்டிருந்தார். சிறப்பு நீதிபதி எம். கே. நாக்பால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டார்.
சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
இந்த நிலையில், சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தாக்கல் செய்யும் பதிலின் நகலை குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் சிங்குக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.