பள்ளியில் குடிதண்ணீர் பானையைத் தொட்ட மாணவன்! கடுமையாக தாக்கிய ஆசிரியர் - மாணவன் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளியில், குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், தலித் மாணவர் ஒருவர் அங்கிருந்த தண்ணீர் பானையை தொட்டதற்காக பள்ளி ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஜலோர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார் ஒன்பது வயதான இந்ரா மெக்வால் (Indra Meghwal). இந்த சிறுவன் சுரணா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு,சாயில் சிங் (Chail Singh) என்ற ஆசிரியர் இந்ரா மெக்வால் கடுமையாக அடித்துள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த இந்ரா அகமாதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
என்ன நடந்தது?
பள்ளி நேரத்தில் இந்ரா மெக்வால் அங்கிருந்த குடிநீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதை கவனித்த ஆசிரியர் சாயில் சிங் அச்சிறுவனை கடுமையாக அடித்துள்ளார். இந்ரா மெக்வால் தலித் என்பதால், அவர் தண்ணீர் பானையை தொடுவது சரியானதில்லை என்று கருதி இந்ரா மெக்வால் மாணவனை தாக்கியுள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதியின் அடிப்படையில் சிறுவனை தரம்குறைவாக நடத்தியதற்காக ஆசிரியர் சாயில் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், மாணவன் உயிரிழந்ததையெடுத்து, ஆசிரியர் மீது கொலை மற்றும் Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில தலித் உரிமைகள் கமிஷன் தலைவர் கிலாடி லால் பைரவா (Khiladi Lal Bairwa) இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உத்தவிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கும், ஹர்ஷ்வர்தன் அகர்வாலா கூறுகையில், தலித் என்பதால் அவர் குடிநீர் பானையை தொட்டதற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதில், மாணவரின் முகம் மற்றும் காது உள்ளிட்ட பகுதிகளில் அதிக காயங்கள் ஏற்பட்டதால், சுயநினைவை இழந்ததாகவும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்ரா மெக்வால் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அதிக காயங்களால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
அறம் சார்ந்த சிந்தனைகளை சொல்லி கொடுக்கும் இடமான பள்ளியிலேயே இதுபோன்ற சாதி அடிப்படையில் மாணவன் தாக்கப்பட்டது மிகப் பெரிய குற்றம் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இப்போல்லாம் யாரு சாதியை பெரிதாக நினைக்கிறாங்கன்னு, சொல்லும் காலத்திலும் சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்திருப்பது வருத்தத்திற்குரியது என்றும் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்