Covid 19 Update: தடுப்பூசி இடைவெளிகளில் தெரிவிக்கப்படும் முரண்.. IMA எச்சரிப்பது என்ன?
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆறு மாதங்கள் காத்திருப்பது என்பது அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு வைரசினை மீண்டும் வெளிப்படுத்தக்கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனாவின் 2 அலை அளப்பரிய பாதிப்பினை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. பெருந்தொற்றினால் முதன் முறையாக ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையினை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தொடர்ச்சியாக மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எப்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. ஏற்கனவே நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக்குழு ( (NTAGI) கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு 6 முதல் 9 மாத கால இடைவெளி விட்டுத்தான் தடுப்பூசிபோட வேண்டும் என அரசிற்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் அரசாங்க குழு பரிந்துரைத்த அறிவிப்புக்கு பின்னர் இந்திய மருத்துவ சங்கம் அதற்கு எதிர்மறையான தகவல் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் 6 மாதத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அது அவர்களை அச்சுறுத்தும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் தெரிவிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக ஆறு மாத காலங்கள் காத்திருக்க வைப்பது என்பது அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ளார். எனவே அரசாங்கம் அதனை விஞ்ஞான ஆதாரங்களுடன் மறுபரிசீலனை செய்து நாட்டில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைக்கு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தியாவை எதிர்காலத்தில் கொரோனா இல்லாத நாடாக நம்மால் பெற முடியும் எனவும் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அரசிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் சங்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தடுப்பூசி போடும் செயல்முறைகளை இந்தியாவில் விரைவுபடுத்தி சில மாதங்களுக்குள் 60-70 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை சமாளிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே சிறந்த வழி எனவும் கூறியுள்ளார். இதோடு இந்தியாவில் கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்வது என்பது பாதுகாப்பானது இல்லை என எச்சரித்துள்ளார். எனவே மத்திய அரசு அதிக அளவிலான தடுப்பூசிகளை வாங்குவதோடு அதனை வீடு வீடாக சென்று மக்களுக்கு செலுத்த முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.