Sanatan Row: விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை: உதயநிதிக்கு பிப்ரவரியில் நாள் குறித்த பாட்னா நீதிமன்றம்!
சனாதன தர்மம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “ இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது’’ என்று உதயநிதி பேசியது நாடு முழுவதும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 262 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பீகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், அமைச்சரின் கருத்துக்களால் வேதனையடைந்த பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கௌசலேந்திர நாராயண், செப்டம்பர் 4 அன்று பாட்னா நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(A), 295 (A), 298, 500 மற்றும் 504 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தமிழக அமைச்சருடன் தொடர்புடையதாக இருந்ததால், இந்த வழக்கை எம்.பி/எம்.எல்.ஏ வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், நீதிபதி சரிகா வஹாலியா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.