Coronavirus Cases India: ஒரே நாளில் 334 பேருக்கு பாதிப்பு..! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..?
97 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
97 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,686 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா:
இந்தியாவில் ஒரே நாளில் 334 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த இருவரும் கேரளாவை சேர்ந்த ஒருவரும் சேர்த்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 (4,46,87,496) கோடியாக உள்ளது.
நோய்த்தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் சதவீதம் 98.80% ஆக இருக்கிறது. இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,54,035 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இறப்பு விகிதம் 1.19% ஆக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் படி இதுவரை 220.63 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் வைரஸ்:
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரொனா தொற்று பாதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்தது. சீனா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொற்று பாதிப்பு சதவீதம் என்பது குறைவாகவே இருந்தது. சீனாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மேலும் உயிரிழப்பும் அதிகமாக பதிவானது. இருப்பினும் சீனாவில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக சீரோ கோவிட் பாலிஸி கைவிடப்பட்டது. இந்த கொள்கையை தளர்த்தியதால் தொற்று பரவல் அதிகரித்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் எதிர்ப்புத் தன்மையைக் கடக்க வைரஸ்களுக்கு ஆற்றல் உண்டாகச் சிறிய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் வேரியண்ட்:
இதனால் வைரஸ் உருமாற்றம் மற்றும் தொற்று பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டாலும் பிற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு நான்கு முதல் ஐந்து சதவீதம் அதிகம் என அவர் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதை அடுத்து அந்த வைரஸின் பல பிறழ்ந்த பதிப்புகளை உலகம் கண்டுள்ளது; அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் பெருகிவரும் ஓமைக்ரான் வகையின் XBB.1.5 வேரியண்ட அதன் மிகச் சமீபத்திய மாறுபாடாகும்.
இவை ஒருபுறம் இருக்க இந்தியாவில் தற்போது எச்3என்2 வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எச்1என்1 வைரஸின் மாறுபாடே இந்த வைரஸ் என கூறியுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல், ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டயம் முகக்கவசம் அணிய வேண்டும் அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )