(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi: ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!
என்னை அவமதிப்பதை தவிர காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
குஜராத்தை குறிவைக்கும் பிரதமர் மோடி:
தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "எனது சமூகத்தைப் பற்றி காங்கிரஸ் எப்படி விமர்ச்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.
என்னை பற்றி எவ்வளவு அவதூறாக பேசுகிறார்களோ, அந்த அளவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் தீர்மானம் வலுவடையும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விடுகிறார்கள். அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ, அவ்வளவு பெருமையாக 370 இடங்களில் தாமரை மலரும்.
"சமூகத்தில் கடைசி நபரின் வாழ்க்கையை மாற்றுவதே எனது லட்சியம்”
வாரிசு அரசியலின் பிடியில் சிக்கிய ஒரு கட்சிக்கு, தங்கள் குடும்பத்தைவிட யாரும் முக்கியமில்லை. நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஏழைகளுக்கு 4 கோடி கான்கிரீட் வீடுகளை பாஜக அரசு கட்டிக் கொடுத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், "சமூகத்தில் கடைசி நபரின் வாழ்க்கையையும் மாற்றுவதே மோடியின் உத்தரவாதம். எனவே, ஒருபுறம் நாட்டில் கோவில்கள் கட்டப்பட்டு வருவதுடன், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு நிரந்தர வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. அனைவரின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் நாடு நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
குஜராத்தை பொறுத்தவரையில், பாஜகவின் கோட்டையாக உள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது.
இந்த முறையும் அனைத்து தொகுதிகளையும் பாஜகவை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியுன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், இந்த முறை கடும் போட்டி அளிக்க முயற்சி செய்து வருகிறது.