"தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்" மத்திய அமைச்சர் சிந்தியா உறுதி!
தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
"உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் இந்தியா"
பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி நிலையத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், மேம்பட்ட, அதிநவீன தொலைத் தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோவின் உற்பத்தி நிலையத்தை இந்தியாவில் தொடங்கியிருப்பது உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பில் நாட்டில் வளர்ந்து வரும் தற்சார்புக்கு ஒரு சான்றாகும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு வலு சேர்க்கும் வகையில், இந்தத் தொழிற்சாலை உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் என்று அவர் கூறினார். இந்தியாவின் தொலைதொடர்பு சூழல் அமைப்பின் முழுமையான வளர்ச்சியை இது உறுதியாக அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொலைத் தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியாவை ஒரு தலைசிறந்த மையமாக மாற்றும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
1200 பேருக்கு வேலைவாய்ப்பு:
பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் முக்கியமான சந்தையாக சுமார் 3 தசாப்தங்களாக இந்தியா திகழ்கிறது. அத்தகைய சிஸ்கோ நிறுவனம் தனது முதல் உற்பத்தி நிலையத்தை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.
இது நாட்டின் உற்பத்தித் திறன்களை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த அதிநவீன உற்பத்தி நிலையம் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளை உருவாக்கும்.
இந்த முதலீட்டின் மூலம் சிஸ்கோ 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மாநிலத்தில் 1200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஸ்கோ அதிநவீன தொலைத்தொடர்பு உற்பத்தி நிலைய தொடக்க விழாவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ், நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை உற்பத்தி அதிகாரி ஜீது பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

