PM Modi: ஆக்கிரமிப்புக்கு மத்தியில் சீனா பற்றி பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா?
PM Modi: சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi: பிரதமர் மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியா - சீனா இடையேயான உறவு குறித்து விரிவாக பேசியுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - மோடி
நியூஸ் வீக் இதழுக்கு அளித்த பேட்டியில், ”சீனாவுடனான நிலையான மற்றும் அமைதியான உறவு, இரு நாடுகள் அல்லது பிராந்தியத்தின் நலனுக்காக மட்டுமல்ல, உலகத்தின் நலனுக்கானது” என மோடி தெரிவித்தார். தொடர்ந்து, “எல்லைப் பிரச்னையால் எழும் அனைத்துப் பிரச்னைகளையும் இரு நாடுகளும் பேசித்தீர்க்க வேண்டும். அதன் மூலம் இருதரப்புக்கும் இடையேயான அசாதாரண சூழலை தவிர்க்க முடியும். ராஜாங்க மற்றும் ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பின் ஈடுபாட்டின் மூலம், நமது எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நம்புகிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீனாவுடன் போட்டியா?
சீனா உடனான பொருளாதார போட்டி தொடர்பான கேள்விக்கு, “ஜனநாயக அரசியல் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி இயந்திரமான இந்தியா, தங்கள் விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்த விரும்புவோருக்கு இயற்கையான தேர்வாகும். சரக்கு மற்றும் சேவை வரி, கார்ப்பரேட் வரி குறைப்பு, திவால் குறியீடு, தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளில் தளர்வு போன்ற பொருளாதார சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன் விளைவாக, எளிதாக வணிகம் செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்கள் ஒழுங்குமுறை கட்டமைப்பு, எங்கள் வரிவிதிப்பு நடைமுறைகள் மற்றும் எங்கள் உள்கட்டமைப்பை உலகளாவிய தரத்திற்கு இணையாக மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த முன்முயற்சிகள் எலக்ட்ரானிக்ஸ், சோலார் தொகுதிகள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் உட்பட 14 துறைகளுக்கு விரிவடையும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு?
பாஜக ஆட்சியில் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு பின்பற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கு, “இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் அல்லது பார்சிகள் போன்ற சிறுபான்மையினர் என அனைத்து மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரும் இந்தியாவில் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
நமது நாட்டில் முதன்முறையாக, திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் என்று வரும்போது, நமது அரசாங்கம் தனித்துவமான செறிவூட்டல் கவரேஜ் அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு புவியியல் சார்ந்த மக்கள் குழுவிற்கு அவை கட்டுப்படுத்தப்படவில்லை. அவை அனைவரையும் சென்றடையும் வகையில் உள்ளன, அதாவது எந்த பாகுபாடும் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370 ரத்து”
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370வது பிரிவின் கீழ் சில அரசியலமைப்புச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “2023 ஆம் ஆண்டில் 21 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். பயங்கரவாத சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள், கல்லெறிதல், ஒரு காலத்தில் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியது, இப்போது அது கடந்த காலத்தின் ஒரு விஷயம். காஷ்மீரி பெண்களுக்கும் ஒரு புதிய விடியல் உருவாகியுள்ளது, அவர்கள் ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகளை இப்போது அனுபவிக்கிறார்கள். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, இப்பகுதி உலகளாவிய நிகழ்வுகளுக்கு வரவேற்கத்தக்க இடமாக மாறியுள்ளத. மக்கள் அமைதியின் பலன அறுவடை செய்கிறார்கள்” என பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் கூட அருணாச்சலபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளின் பெயரை மாற்றி அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தியா - சீனா இடையேயான உறவு முக்கியமானது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.