Chandrayaan 3: சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்?
சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் திட்டம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான் – 2 ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
சந்திரயான் 3:
சந்திரயான் 3 விண்கலத்தில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சந்திரயான்-3 மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டது. இப்படி பலமுறை சோதனை செய்யப்பட்ட பின் ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 பூமியின் புவி வட்டார பாதையில் இருந்து விலகி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் வட்டார பாதைக்குள் நுழைந்தது. பின் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு அதில் இருந்த விக்ரம் எனும் லேண்டர் கருவி தணியாக பிரிந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி விக்ரம் லேண்டரின் உயரம் முதல்முறையாக குறைக்கப்பட்டது. நேற்றைய தினம் இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரின் தூரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.
நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்:
Chandrayaan-3 Mission :
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 20, 2023
🇮🇳Chandrayaan-3 is set to land on the moon 🌖on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/EUxekbHc0g
Facebook…
இப்படி படிப்படியாக அனைத்து சவாலான கட்டங்களையும் கடந்து சந்திரயான் 3 பயணம் மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அதாவது வரும் புதன்கிழமை மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லேண்டர் கருவி நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் அங்கு சூரிய உதயத்திற்காக காத்திருப்பதாகவும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6 மணி 4 நிமிடங்களில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின் அதில் இருக்கும் பிரக்யான் ரோவர் வெளியே வந்து தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் இன்று தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக லூனா 25 விழுந்து நொருங்கியது. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.