Chandrayaan 3 Success: 'சந்திரயான் 3.. அசைக்க முடியாத அர்ப்பணிப்பு’ .. 'விண்வெளித்துறையில் பொன்னாள்’ .. தலைவர்கள் வாழ்த்து
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு மற்றும் சாதனையை நிறைவேற்ற அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சந்திரயான் பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி:
சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் என ‘நியூ இந்தியா’ என்ற ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்திய விண்வெளித்துறையில் பொன் எழுத்துக்களால் இந்நாள் பொறிக்கப்படும். சந்திரயான் தனது 3வது பயணத்தை துவங்குகிறது. தேசத்தின் கனவு, நம்பிக்கையை சுமந்து செல்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை:
சந்திரயான் 3, விண்ணில் சீறிப் பாய்ந்து பயணத்தை தொடங்கியுள்ளது என்றும் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா:
என்ன ஒரு அசாதாரண சாதனை! ..சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! விண்வெளி ஆய்வுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, மேலும் இந்த பணி சந்தேகத்திற்கு இடமின்றி புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா:
சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துக்கள். இந்த சிறப்பான தருணங்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்! ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமிதம் கொள்கிறான்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியா தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விஞ்ஞானிகளின் அயராத ஆர்வம் இன்று இந்தியாவை தலைமுறை தலைமுறையாக போற்றும் ஒரு குறிப்பிடத்தக்க விண்வெளி பயணத்தை எழுதும் பாதையில் கொண்டு சென்றுள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.