AP Capital Amaravati: முடிவுக்கு வராத தலைநகர் பிரச்சினை; முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு; இதுதான் முடிவு!
Andhra Pradesh Capital Amaravati: ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அமராவதிதான் மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
AP Capital Amaravati: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமராவதிதான் தலைநகராக இருக்கும் என்று தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் அபார வெற்றி:
மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. ஜூன் 4 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி 135 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியானது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை தழுவியது.
”அமராவதிதான் தலைநகர்”:
இந்நிலையில், நாளை தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என தெரிவித்துள்ளார். மூன்று தலைநகரங்கள் என்று வஞ்சகச் செயற்பாடுகளை, மக்களுடன் விளையாட மாட்டோம் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஆந்திரா மாநிலத்தின் தலைநகர் பிரச்னை, இத்துடன் முடியும் என கருத்துக்கள் எழுந்து வருகிறது. சரி, ஆந்திர மாநிலத்தில் தலைநகர் விவகாரத்தில் என்ன பிரச்னை,ஜெகன் உடன் இருந்த கருத்து வேறுபாடு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
தலைநகர் விளையாட்டு:
YSR காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டும் ஆட்சியை அமைத்தது. அப்போது, தலைநகராக இருந்த அமராவதியை நீக்கம் செய்தது. நிர்வாகத்தை பரவலாக்கும் வகையில் மூன்று தலைநகரங்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் அறிவித்தது.
மார்ச் 2022 இல், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், ஒய் எஸ் ஆர் சிபி அரசாங்கத்திற்கு அமராவதியை மாநிலத் தலைநகராக உருவாக்க உத்தரவிட்டது. இது ஜெகன் மோகன் அரசுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஜெகன் அரசு. இந்நிலையில், தலைநகர் பிரச்னை தீர்க்கப்படாமலே இன்றுவரை இருந்து வருகிறது.
மேலும் , தற்போதுவரை ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு தலைநகரே இல்லை என்பது ஆச்சர்யமான தகவலாக பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது, அமராவதிதான் மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என்றும் 3 தலைநகரங்கள் என்ற விளையாட்டே கிடையாது என்றும் தெரிவித்தார்.
மேலும் விசாகப்பட்டினம் வர்த்தக மையமாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு ஒரே ஒரு தலைநகர், அது அமராவதிதான் இருக்க போகிறது என்பது தெரியவந்துள்ளது.