Delhi Ordinance: டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அடுத்த அதிரடி..மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லி அரசுக்கு பேரிடியாக அமைந்தது.
![Delhi Ordinance: டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அடுத்த அதிரடி..மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Centre Clears Bill To Replace Delhi Ordinance For Control Of Officers know more details here Delhi Ordinance: டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அடுத்த அதிரடி..மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/e7ee28e6eba4f24f46202c14a32530131690302319285729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லி அரசின் உரிமைகளை பறிக்கிறதா அவசர சட்டம்?
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சட்டத்தை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
அவசர சட்ட விவகாரத்தில் அடுத்த அதிரடி:
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மீண்டும் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லி அரசுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த சூழலில், அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத சமயத்தில்தான், மத்திய அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
மாநிலங்களவையில் பாஜகவின் முயற்சிகளை தோற்கடிக்குமா ஆம் ஆத்மி?
ஆனால், நாடாளுமன்றம் மீண்டும் கூடிய ஆறு வாரங்களுக்குள் அவசர சட்டத்தை மசோதாவாக கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர சட்டத்திற்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் இது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை நம்பி உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஆம் ஆத்மி அறிவித்திருந்தது. இதையடுத்து, டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)