GST ED Case: மத்திய அரசு அதிரடி.. அமலாக்கத்துறைக்கு வந்த கூடுதல் அதிகாரம்.. ஜிஎஸ்டி முறைகேடுகளுக்கு தீர்வு
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், ஜிஎஸ்டி அமைப்பையும் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், ஜிஎஸ்டி அமைப்பையும் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையால் பணமோசடி வழக்குகளை விசாரிப்பதில் முதன்மையான அமைப்பாக உள்ள அமலாக்கத்துறைக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி:
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த வளர்ச்சி, பணமோசடி தடுப்பு அமைப்பான அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம், 2022 இன் பிரிவு 66 இன் துணைப்பிரிவு (1) இன் உட்பிரிவு (1) இன் ஷரத்து (ii)ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
26வது அமைப்பு:
புதிய அறிவிப்பின் மூலம், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன், விசாரணைக்கு தேவையான தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டிய இந்த பட்டியலில் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய போட்டி ஆணையம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட 25 அமைப்புகள் உள்ளன. அதில் 26வதாக ஜிஎஸ்டி அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில். ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் அமலாக்கத்துறையினர் இடையே தரவுகளை பரிமாற்றம் செய்துகொள்வது, பணமோசடி வழக்குகளின் விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் போதைப்பொருள் கடத்தலை சமாளிப்பதற்கு ஏற்ப இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் இயற்றப்பட்டது. தற்போது அதில், ஜிஎஸ்டி மோசடி வழக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன.
புவிசார் விவரங்களை பதிவு செய்த அரசு:
போலி பில்லிங் மற்றும் போலி விலைப்பட்டியல் மோசடிகளை கட்டுப்படுத்தவும், போலி வணிகங்களை அடையாளம் காணவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய தலைவர் விவேக் ஜோஹ்ரி கடந்த மாதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 1.8 கோடி நிறுவனங்களின் முகவரிகளை புவிசார் குறியீடு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களின் உண்மையான இருப்பிடத்தை கண்டறியவும், சரியான பதிவுகளைச் சரிபார்க்கவும் உதவும் மற்றும் மோசடிகளை தவிர்க்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் அதிகாரம்:
நாடு முழுவதும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அமலாக்கத் துறையின் பெரும்பாலான வழக்குகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அமலாக்கத்துறை நினைத்தால் வழக்கில் தொடர்புடையவர்களுடைய இடங்களில் சோதனை நடத்த முடியும். அவர்களது சொத்துக்களை முடக்கி வைக்க முடியும். தேவைப்பட்டால் கைதும் செய்ய முடியும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

