தொழிலதிபரை மிரட்டிய ED அதிகாரி.. லஞ்சம் வாங்கும்போது சுத்துப்போட்ட சிபிஐ.. பரபரப்பில் டெல்லி!
20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் (ED) உதவி இயக்குனரை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் (ED) உதவி இயக்குனரை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி சந்தீப் சிங் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரியை சுத்துப்போட்ட சிபிஐ: அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் நகைக்கடைக்காரரின் மகனை விடுவிக்க உதவுவதாக கூறி நகைக்கடை தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றுள்ளார் சந்தீப் சிங் யாதவ். டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொய் வழக்கில் சிக்க வைப்பேன் என தொழிலதிபரை அமலாக்கத்துறை அதிகாரி சந்தீப் சிங் யாதவ் மிரட்டியதாக சி.பி.ஐ.யிடம் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில், பொறி வைக்கப்பட்டு, லஞ்சம் வாங்கும் போது, அமலாக்கத்துறை அதிகாரி, கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி தொழிலதிபர் அமன் தாலை காப்பாற்ற 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அமலாக்கத்துறையின் உதவி இயக்குனரை மேலும் ஆறு அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச வழக்கில் சிக்கும் ED அதிகாரிகள்: இதேபோன்று, கடந்தாண்டு, டிசம்பர் மாதம், அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.