Ayurvedic Corona medicine : அங்கீகரித்த ஆந்திர அரசு : ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்துமா?
இந்த ஆயுர்வேத மருந்தை சாப்பிட்ட மக்களில் சிலர் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் மாஸ்க்கும் அணியப்போவதில்லை என்றும் கூறி வருகிறார்கள்
இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைக்காக ஆயுர்வேத மருந்து ஒன்றை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது ஆந்திர அரசு. அது அங்கீகரிக்கப்பட்டதன் பின்னணி சுவாரசியமானது. இந்த ஆயுர்வேத மருந்து சர்ச்சையால் தொடர்ந்து அல்லோலகலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆந்திர மாநிலம். அந்த மாநிலத்தின் நெல்லூர் கிருஷ்ணப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அனந்தையா என்பவர் பல வருடங்களாக ஆயுர்வேத சிகிச்சை நிபுணராகச் செயல்பட்டு வருகிறார்.
கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் ஆயுர்வேதக் கஷாயம் ஒன்றை உருவாக்கியுள்ளார். எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதுகாப்பான வகையில் கொரோனாவுக்கு எதிராக அந்த மருந்து செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சொன்னதை அடுத்து அவரிடமிருந்து அந்த மருந்தைப் பெற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினார்கள், ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட நோயாளிகளுக்கு அதில் இருந்தவாறே இந்த மருந்து புகட்டப்பட்டது. ஏப்ரல் மாத இறுதி தொடங்கியே அனந்தையா இந்த மருந்தை விநியோகித்து வந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மக்களின் கூட்ட நெரிசல் காரணமாக மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. அனந்தையா போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.
Andhra Pradesh government gives green signal for distribution of Ayurvedic concoctions except for eye drops, made by Bonigi Anandaiah, Ayurvedic practitioner from Krishnagiri village in Nellore district: Andhra Pradesh Chief Minister's Office (AP CMO)
— ANI (@ANI) May 31, 2021
கண்ணுக்கான சொட்டு மருந்தாகவும் சிறிய பாக்கெட்டில் லேகியமாகவும் தரப்பட்ட இந்த மருந்து தீவிர கொரோனா பாதிப்பில் இருந்தவரை குணப்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் ஆயுஷ் இரண்டும் இந்த மருந்தை ஆய்வுசெய்ய வேண்டும் அதனால் தற்காலிகமாக இதன் விநியோகத்தை நிறுத்தவேண்டும் என அறிவுறுத்தியது. ஆய்வு முடிவுகள் வெளிவர 2 அல்லது 3 வாரங்கள் ஆகலாம் என்கிற நிலையில் மத்திய அமைச்சகத்தின் இந்த அறிவுரையை மீறி தற்போது பொது விநியோகத்துக்காக இந்த மருந்தைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது ஆந்திர அரசு.அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த மருந்தைத் தற்போது அந்த மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாக அங்கீகரித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார். இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மருந்தைத் தற்போது பெரிய அளவில் உற்பத்தி செய்யவிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அனந்தையா இந்த மருந்து உற்பத்தியை மேற்பார்வையிடுவதற்காக திருப்பதி தேவஸ்தானத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்.
இது ஒருபக்கமிருக்க ஆயுர்வேத மருந்தைச் சாப்பிட்ட மக்களில் சிலர் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் மாஸ்க்கும் அணியப்போவதில்லை என்றும் கூறி வருகிறார்கள். அரசின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக இது இருப்பதால் இதுகுறித்து சர்ச்சை வலுத்துவருகிறது.
Also Read: ’மத்திய அரசுதான் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கவேண்டும்’ - உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்